காமெடியுடன் காதல் ரசிகர்களை கவர்ந்ததா? காபி வித் காதல் விமர்சனம்
பல வருட காலமாக ஒரு நல்ல வெற்றிக்கு ஏங்கும் ஜீவாவிற்கு கம்பேக்காக இப்படம் அமைந்துள்ளது. அவருடைய எதார்த்தமான நடிப்பு மீண்டும் சிவா மனசுல சக்தி ஜீவாவை நினைவூட்டுகிறது.
சுந்தர் சி இயக்கத்தில் ஜீவா,ஸ்ரீகாந்த்,ஜெய், அம்ரிதா,மாளவிகா, ரைசா,பிரதாப் போத்தன், யோகி பாபு போன்ற நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து கலக்கி இருக்கும் படம் "காபி வித் காதல்".
Advertisment
முக்கோண காதல் கதைகள் தமிழ் சினிமாவிற்கு புதிதல்ல என்றாலும் அதை மீண்டும் ஒரு முறை புதுப்பித்து அழகாக திரைக்கதை அமைத்து அற்புதமான ஒரு ஜாலியான திரைப்படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் சுந்தர்.சி. பல வருட காலமாக ஒரு நல்ல வெற்றிக்கு ஏங்கும் ஜீவாவிற்கு கம்பேக்காக இப்படம் அமைந்துள்ளது. அவருடைய எதார்த்தமான நடிப்பு மீண்டும் சிவா மனசுல சக்தி ஜீவாவை நினைவூட்டுகிறது. பிரிந்த காதலை நினைத்து கலங்கும் காட்சிகளில் சிறந்த நடிகராகவும் திகழ்கிறார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் ரீஎன்ட்ரீ கொடுத்திருக்கிறார் ஶ்ரீகாந்த். அவருக்கு மற்றுமொரு சிறப்பான கதாபாத்திரம். மனைவி இருக்கும் போதே வேறு பெண்ணுடன் சபலம் கொண்டு, பின் தன் தவறை உணர்ந்து திருந்தும் மியூசிக் டீச்சராக சிறப்பாக நடித்துள்ளார்.
ஜெய்க்கு மற்றுமொரு ஜாலியான ரோல்,அதனை தரமாக செய்துள்ளார். ஜெய்யின் சிறுவயது தோழியாக வரும் அம்ரிதா, முதல் பாதியில் ஜெய் மீது ஒருதலை காதல் கொண்டிருப்பதும், ஜெய் அதை ஏற்க மறுத்த பின் தான் தந்தை பார்த்தவரையே திருமணம் செய்யலாம் என்று நினைக்கும் போது, உண்மையான காதலை உணர்ந்து மீண்டும் அமிர்தவுடன் சேருவதற்கான ஜெய் செய்யும் அனைத்தும் கலகலப்பு.
மேரேஜ் காண்ட்ராக்டர்களாக வரும் யோகி பாபுவும், ரெடின் கிங்ஸ்லியும் சிரிப்பை வாரி வழங்கியிருக்கிறார்கள். மறைந்த பிரதாப் போதனின் நடிப்பு யதார்த்தம். திவ்யதர்ஷினிக்கு ஒரு குட்டி கேரக்டர் என்றாலும் அதை அழகாக செய்து இருக்கிறார். மும்பை மாடல் மாளவிகவிற்கு தமிழில் முதல் படம் என்றாலும் தன் துள்ளலான நடிப்பு மற்றும் நடனத்தின் மூலம் கவர்ந்திருக்கிறார்.
சுந்தர்.சி படம் என்றாலே சிரிப்பிற்கு பஞ்சம் இருக்காது என்ற நம்பிக்கையை மீண்டும் ஒருமுறை காப்பாற்றியிருக்கிறார். சில காட்சிகள் குடும்ப ரசிகர்களுக்கு சற்று நெருடலை ஏற்படுத்தலாம். யுவனின் இசை படத்தின் கலகலப்பிற்கு மேலும் புத்துணர்ச்சியை தருகிறது. பாடல்கள் அனைத்துமே கேட்கும் ரகம். கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் கலர்புல்.
இது போன்ற ஒரு கடினமான கதையை வைத்துக்கொண்டு அதற்கு சிறப்பான திரைக்கதை அமைத்து படத்தை ஜாலியாக கொண்டு சென்று இறுதியில் படம் முடிந்து வெளியே வருபவர்கள் ஒரு புன்சிரிப்புடனும் ஒரு நல்ல இதயபூர்வமான படம் பார்த்த திருப்தியில் வருகிறார்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு இது போல ஒரு நல்ல ஃபீல் குட் (Feel good) படத்தை கொடுத்த சுந்தர்.சி க்கு மிகப்பெரிய வாழ்த்துக்கள். மொத்தத்தில் காபி வித் காதல் - ஆனந்தம்.
நவீன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“