/indian-express-tamil/media/media_files/2025/06/28/janma-natchathiram-2025-06-28-12-56-55.jpg)
தமிழ் சினிமாவில் ஆண்டுதோறும் பல படங்கள் வெளியானாலும் ஒரு சில படங்கள் காலம் கடந்தும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கும். குறிப்பாக அந்த படத்தின் கதை சில தலைமுறைகள் கடந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கும். அந்த வகையிலான ஒரு படம் தான் ஜென்ம நட்சத்திரம்.
1976-ம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியான படம் தி ஓமன். இந்த படத்தின் கதையை தழுவி தமிழில் எடுக்கப்பட்ட படம் தான் ஜென்ம நட்சத்திரம். தக்காளி ஸ்ரீனிவாசன் இயக்கிய இந்த படம் ஒரு குழந்தையை மையமாக வைத்து ஹாரார் த்ரில்லர் பாணியில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். பிரமோத், ஜி. ஆனந்தராம், சிந்துஜா, பேபி விசித்ரா, நாசர், மற்றும் விவேக் பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர்.
1991-ம் ஆண்டு வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இந்த படத்தின் பெயரை கேட்டாலே இப்போதும், 90-ஸ் குழந்தைகளின் மத்தியில் பெரிய பீதி உண்டாகும். அந்த அவளவிற்கு இந்த படத்தில் திகில் காட்சிகளில் மிரட்டி இருப்பார்கள். முதல்வரின் செயலாளராக இருக்கும் ஹீரோவுக்கும் பிறந்த குழந்தை இறந்துபோக, அதே மருத்துவமனையில் பிறக்கும்போதே தாயை இழந்த குழந்தையை தத்தெடுத்து மனைவிக்கு தெரியாமல் வைத்துவிடுவார்.
இந்த குழந்தை வளர வளர ஹீரோவின் வீட்டில் நடக்கும் அமானுஷ்யமான சம்பவங்கள் தான் இந்த படத்தின் கதை. ஹீரோ வீட்டுக்கு தத்துப்பிள்ளையாக வரும் சேவியர் என்ற அந்த குழந்தை சிரித்த முகத்துடனே நடித்திருக்கும். ஆனாலும் அந்த குழந்தை வரும் காட்சிகள் அனைத்தும் பயத்தின் உச்சக்கட்டமாக இருக்கும். இந்த குழந்தை சேவியர் கேரக்டரில் நடித்து அனைவரையும் இன்றும் பயத்தில் வைத்திருக்கும் நடிகை தான் பேபி விசித்ரா.
ஜென்ம நட்சத்திரம் படத்தில் சிரித்த முகத்துடன் பயத்தை கொடுத்து மிரட்டிய இந்த பேபி விசித்ரா, தளபதி படத்தில் ரஜினிகாந்துடன் அப்பாவியாக பேசும் மகளாக நடித்திருப்பார். இந்த படமும் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. பேபி விசித்ராவின் நடிப்பும் பாராட்டுக்களை பெற்றது. அதேபோல் மாநகர காவல் படத்தில் விஜயகாந்த் தங்கையின் மகளாகவும், ஜெய்ஹிந்த் படத்தில் அர்ஜூனின் அண்ணன் மகனாகவும் பேபி விசித்ரா நடித்திருந்தார். அதேபோல் ஆசை படத்தில் அஜித்துடன் ஒரு காட்சியில் நடித்திருப்பார்.
பெரும்பாலாலும் பேபி விசித்ரா நடித்த அனைத்து படங்களுமே வெற்றிப்படமாக அமைந்திருக்கின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பேபி விசித்ரா அவள் க்ளிக்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் இந்த படங்கள் குறித்து நினைவுகூர்ந்துள்ளார். மேலும், தான் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்க தயாராக இருப்பதாகவும், கேரக்டர் நடிகையாக நடிக்க வாய்ப்புகள் வந்தால் ஏற்றுக்கொள்வேன் என்றும் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.