தமிழ் சினிமாவில் பல புதுமையான முயற்சிகளை எடுத்த இயக்குனர் கே.பாலச்சந்தர். இயக்குனர் சிகரம் என்று போற்றப்படும் இவர், பெண் கேரக்டர்களை மையப்படுத்தி பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். கமல்ஹாசன் ரஜினிகாந்த் என 2 ஜாம்பவான்களை தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்த பெருமைக்கு சொந்தக்காரரான பாலச்சந்தர், உயிருக்கு ஆபத்தான நிலையிலும் நடிகையின் கால்ஷீட் போய்விட கூடாது என்பதற்காக படப்பிடிப்பை நடத்தியுள்ளார்.
1972-ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான படம் வெள்ளி விழா. ஜெமினி கணேசன் நாயகனாக நடித்த இந்த படத்தில் ஜெயந்தி வாணிஸ்ரீ முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர். இந்த படத்திற்காக வாணிஸ்ரீ 7 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்திருந்ததால், முதலில் அவர் தொடர்பான காட்சிகளை படமாக்க பாலச்சந்தர் தீவிரம் காட்டி வந்தார். அப்படி ஒருநாள் படப்பிடிப்பின்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
அதன்பிறகு முகமெல்லாம் வியர்த்து கொட்டியதால் சோர்வான பாலச்சந்தர் முகத்தை துடைத்துக்கொண்டு படப்பிடிப்பை நடத்த முயற்சித்துள்ளார். ஆனால் அவரால் முடியவில்லை. இதனை கவனித்த தயாரிப்பு நிறுவனம் அவருக்கு உடனடியாக ஒரு மருத்துவரை ஏற்பாடு செய்தனர். செட்டுக்கு வந்த மருத்துவர் கே.பாலச்சந்தரை பரிசோதித்தனர். அப்போது அவருக்கு பாதிப்பு அதிகமாக இருந்ததை தொடர்ந்து உடனடியாக மருத்துவமனையில் சேருமாறு கூறியுள்ளனர்
இதை கேட்டு அதிர்ச்சியான பாலச்சந்தர் அய்யயோ வாணிஸ்ரீ கால்ஷீட் போய்விடுமே என்று கூறியுள்ளார். அப்போது தயாரிப்பு நிறுவனம் வாணிஸ்ரீ கால்ஷீட் முக்கியமான இல்ல உங்க உயிர் முக்கியமா என்று கேட்டுவிட்டு அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சைக்கு பின் குணமான பாலச்சந்தர் 3 மாதங்களுக்கு எந்த பணியிலும் ஈடுபட கூடாது என்று கூறப்பட்டது. மேலும் சிகரெட் பழக்கம்தான் இதற்கு காரணம் என்பதால் அன்றில் இருந்து இந்த பழக்கத்தை நிறுத்தியுள்ளார்.
இயக்குனர் சிகரம் என்று போற்றப்படும் கே.பாலச்சந்தர் ஒரு நடிகையின் கால்ஷீட் போய்விடும் என்பதற்காக தனது உயிரையே விட துணிந்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“