தமிழ் திரைப்பட தாயாரிப்பாளர் சங்கம் நடத்தும் கலைஞர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க உள்ள நடிகர்கள் நடிகைகள் குறித்து பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவித்துள்ளார். இதில் முன்னணி நடிகர்களான ரஜினி கமல் ஆகியோர் பங்கேற்பது உறுதியாகியுள்ளது.
முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு தமிழ் திரையுலகம் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வரும் டிசம்பர் 24-ந் தேதி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இந்த நூற்றாண்டு விழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்ற தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து தனியார் ஹோட்டலில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் ராமசாமி, செயலாளர் ராதா கிருஷ்ணன், பொருளாளர் சந்திரபிரகாஷ், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, இயக்குனர் ஆர்.கே.செல்வமணி, தயாரிப்பாளர் கே.ராஜன் உள்ளிடோர் பங்கேற்றனர்.
இந்த விழாவில் பேசிய நிர்வாகிககள், இந்த கலைஞர் நூற்றாண்டு விழாவில் அனைத்து நடிகர் நடிகைகளும் பங்கேற்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அதே போல் நாங்கள் அனைவருக்கும் அழைப்பு கொடுக்க போகிறோம். இந்த நிகழ்ச்சிக்கு வர வேண்டும் என்று யாரையும் நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை. எல்லோரும் வர வேண்டும் என்று நாங்கள் அழைக்கிறோம். கலைஞரின் முக்கியத்துவத்தை அறிந்தவர்கள் அவர்கள் கண்டிப்பாக வருவார்கள் என்று முரளி ராமநாராயணன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய இயக்குனர் செல்வமணி, நிகழ்ச்சிக்கு இன்னும் ஒரு மாத காலம் உள்ளது. அதற்குள் அனைவரையும் நேரில் சென்று அழைக்க இருக்கிறோம். அனைவரையும் அழைத்த பிறகு யார் யார் வருகிறார்கள் என்பதை உறுதி செய்துகொண்டு நிகழ்ச்சிகள் குறித்து அட்டவனை தயார் செய்யப்படும். டிசம்பர் 2-வது வாரத்தில் நிகழ்ச்சிகள் தொடர்பான அட்டவனை வெளியிடப்படும்.
அதேபோல் கலைஞர் நூற்றாண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், பங்கேற்பார்கள். அதே நேரம் விஜய் மற்றும் அஜித் உள்ளிட்ட முக்கிய நடிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக பொது நிகழ்ச்சிகளை தவிர்த்து வரும் நடிகர் அஜித் கலைஞர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்றால் பல ஆண்டுகளுக்கு பிறகு அவர் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சியாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.