தமிழ் சினிமாவின் கலைவாணர் என்று அழைக்கப்பட்ட என்.எஸ் கிருஷணனின் நாகர்கோவில் வீட்டை தனது சொந்த செலவில் சீரமைத்து தருவதாக மேயர் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரியில் பிறந்தவர் என்.எஸ் கிருஷ்ணன். தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகராகவும் பாடகராகவும் இருந்த இவர் கலைவாணர் என்ற பட்டத்துடன், நடிப்பிலும் நகைச்சுவையிலும் வித்தியாசத்தை கொடுத்தவர். மேலும் சாதாரன நகைச்சுவை என்று இல்லாமல் அதில் மக்களுக்கு தேவையான சமூக சீர்த்திருத்தக் கருத்துக்கள் இருக்க வேண்டும் என்று விரும்பியவர்.
அதேபோல் தனது நகைச்சுவை காட்சியில் சமூக சீர்திருத்த கருத்துக்களை போகிற போக்கில் சொல்லி, மக்களை சிரிக்கவைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்க வைத்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியை வகுத்து அடையாளத்தை உருவாக்கியவர் கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணன். உலகப் புகழ்பெற்ற சார்லி சாப்ளின் போல, சிரிப்புடன் சிந்தனையையும் கொடுத்த இவர், தனது நகைச்சுவையில் யார் மனதும் புண்பட கூடாது என்பதில் கவனமாக இருந்தவர்.
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 25வது வார்டுக்கு உட்பட்ட ஒழுகினசேரியில் என.எஸ் கிருஷ்ணனின் வீடு அமைந்துள்ளது. இந்த பகுதியில் சமீபத்தில் ஆய்வு மேற்கொண்ட மேயர் மகேஷ் கலைவாணர் வீட்டை ஆய்வு செய்ததோடு, அவரது குடும்பத்தினரிடம் நலம் விசாரித்தார்.
தொடர்ந்து கலைவாணர் வீடு மற்றும் அவர்களின் குடும்பத்தின் தற்போதைய நிலைமையை தமிழ்நாடு முதல்வரின் கவனத்திற்கு எடுத்து செல்வதாக தெரிவித்த அவர், கலைவாணர் வாழ்ந்த வீட்டை, சொந்த செலவில் சீரமைத்து, அவரது குடும்பத்தினருக்கு தேவையான உதவியை செய்வதாக தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“