விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ள படத்தில் நாயகியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் உலக நாயகன் கமல்ஹாசன் 4 ஆண்டு இடைவெளிக்கு பிறகு கடந்த ஆண்டு வெளியான விக்ரம் படத்தின் மூலம் ரீ-என்டரி கொடுத்தார். கமல்ஹாசன் திரை வாழ்க்கையில் இந்த படம் அவருக்கு பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் முழுவீச்சில் நடித்து வருகிறார்.
மேலும் தெலுங்கில் தயாராகி வரும் பிராஜக்ட் கே என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும கமல்ஹாசன் தனது 234-வது படமாக மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க உள்ளார். 1987-ம் ஆண்டு வெளியான நாயகன் படத்திற்கு பின் கமல்ஹாசன் மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணைய உள்ள இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதனிடையே நவம்பர் 7-ந் தேதி கமல்ஹாசன் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தின் ப்ரமோ வெளியாகும் என்று கமல்ஹாசன் அறிவித்துள்ளார். தற்போது இதற்கான ஷூட்டிங் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தில் நாயகியாக நடிக்க நடிகை நயன்தாராவிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா கடந்த 2005-ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த், விஜய் அஜித் சூர்யா விக்ரம் தனுஷ் என முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்துள்ள நயன்தாரா இதுவரை கமல்ஹாசனுடன் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை.
தற்போது கமல் – மணிரத்னம் இணையும் கமல் 234 படத்தில் நயன்தாரா நடிக்கும் பட்சத்தில் கமலுடன் நயன்தாரா இணையும் முதல் படமாக இருக்கும். இந்த படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“