New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/05/exKDSzMYhVCaC0ybI0Gk.jpg)
நடிகை அக்ஷரா ஹாசன், தனது குடும்பப் பெயரையும், தனது பெயரையும் தவறாகப் பயன்படுத்தி மோசடி செய்யும் நபர் குறித்து இன்ஸ்டாகிராமில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தனது பெயரையும், தனது குடும்பப் பெயரையும் தவறாகப் பயன்படுத்தி, சில மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் ஒரு நபரை குறித்து பிரபல நடிகர் கமல்ஹாசனின் இளைய மகளும், தமிழ் மற்றும் இந்தி திரையுலகில் நடிகையாக வலம் வருபவருமான அக்ஷரா ஹாசன், கடுமையாக எச்சரித்துள்ளார்.
இது குறித்து, அக்ஷரா ஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "திரையுலகைச் சேர்ந்த எனது சக நண்பர்களுக்கு ஒரு முக்கியமான தகவல். இப்ராஹிம் அக்தர் என்ற நபர் எனது பெயரையும், எனது குடும்பத்தின் பெயரையும் தவறாகப் பயன்படுத்தி, ஊட்டியில் அலுவலகம் வைத்துக்கொண்டு திரைப்படத் தயாரிப்புப் பணிகளில் நாங்கள் ஈடுபட்டு வருவதாகப் பொய் கூறி வருகிறார். இந்த கூற்றுக்கள் முற்றிலும் பொய்யானவை. அவருக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை" என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த மோசடிக்காரர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியாக கூறியுள்ள, அக்ஷரா ஹாசன் "இந்த விவகாரத்தில் தேவையான சட்ட நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து வருகிறோம். தயவுசெய்து அவரிடம் இருந்து எச்சரிக்கையாக இருங்கள். எந்த வகையிலும் அவரிடம் தொடர்பு கொள்ளவோ அல்லது அவரை ஊக்குவிக்கவோ வேண்டாம். உங்கள் கவனத்திற்கும், தொடர்ந்து அளித்து வரும் ஆதரவிற்கும் நன்றி" என்றும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்த எச்சரிக்கைப் பதிவுக்குக் கீழ், பலரும் அக்ஷரா ஹாசனுக்கு நன்றி தெரிவித்தும், இதுபோன்ற 'மோசடிக்காரர்களை' அம்பலப்படுத்தியதற்காகப் பாராட்டியும் கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர். இந்த மோசடிக்காரர், அக்ஷரா ஹாசனுடன், அவரது தந்தை கமல்ஹாசன், தாய் சரிகா மற்றும் சகோதரி ஸ்ருதி ஹாசன் ஆகியோரில் யாரைக் குறிவைத்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்பதை அவர் குறிப்பிடவில்லை.
அக்ஷரா ஹாசன், 2015-ஆம் ஆண்டு வெளியான பால்கி இயக்கத்தில் அமிதாப் பச்சன் மற்றும் தனுஷ் நடித்த "ஷமிதாப்" திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தமிழில், 2017-ஆம் ஆண்டு வெளியான அஜித்குமார், விவேக் ஓபராய், காஜல் அகர்வால் நடித்த "விவேகம்" திரைப்படம் மூலம் அறிமுகமானார். கடைசியாக அவர் 2019-ஆம் ஆண்டு வெளியான "ஃபிங்கர் டிப்" என்ற வலைத் தொடரிலும், 2022-ஆம் ஆண்டு வெளியான "அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு" என்ற திரைப்படத்திலும் நடித்தார். இவர் நடிப்பில், விரைவில் "அக்னி சிறகுகள்" திரைப்படம் வெளியாக உள்ளது.
கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவான "தக் லைப்" திரைப்படம் இன்று (ஜூன் 5) வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதேபோல் கமல்ஹாசனின் மூத்த மகள், ஸ்ருதி ஹாசன் கடைசியாக "சலார்: பார்ட் 1 - சீஸ்ஃபயர்" திரைப்படத்தில் நடித்தார். அவர் விரைவில் "கூலி", "ட்ரெய்ன்", "ஜன நாயகன்", மற்றும் "சலார் பார்ட் 2: ஷௌர்யங்கா பர்வம்" ஆகிய படங்களில் நடிக்கவுள்ளார். சரிகா கடைசியாக "மாடர்ன் லவ்: மும்பை" என்ற ஆந்தாலஜி தொடரில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.