தன்னை வாழ்த்தி வெளியான ஒரு பாடலில், தான் கண்ணதாசனை வீழ்த்தி விட்டதாக எழுதியிருந்த வரிகளை பார்த்த வாலி, கடுமையான கோபத்துடன் இந்த வரிகளை மாற்றினால் தான் இந்த பாடல் வெளியாக ஒப்புக்கொள்வேன் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் தனது வாழ்நாளின் கடைசி வரை வாலிப கவிஞர் என்று போற்றப்பட்டவர் தான் வாலி. கவியரசர் கண்ணதாசன் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் அவருக்கு போட்டியாக வந்தவர். இருவருக்கும் இடையில் போட்டி இருந்தாலும், தனிப்பட்ட முறையில் நெருங்கிய நண்பர்களாகவும் இருந்துள்ளனர். அதேபோல் ஒரு கலக்கட்டத்தில் கண்ணதாசன் எழுத வேண்டிய ஒரு பாடல் கவிஞர் வாலிக்கு வந்தது அனைவரும் அறிந்த ஒரு தகவல்.
அதே சமயம் வாலி வாய்ப்பு தேடி அலைந்துகொண்டிருந்த காலக்கட்டத்தில் அவர், எழுத வேண்டிய ஒரு பாடலை கண்ணதாசன் எழுதியுள்ளார். சினிமாவில் வாய்ப்பு தேடிய கவிஞர் வாலி, வாய்ப்பு கிடைக்காத விரக்தியில், தனது நண்பருடன் டிவிஎஸ் கம்பெனியில் வேலைக்கு சேர மதுரை கிளம்பியுள்ளார். அப்போது கண்ணதாசன் எழுதிய ''மயக்கமா கலக்கமா'' என்ற பாடலை கேட்ட வாலி மதுரை செல்லும் எண்ணத்தை கைவிட்டு மீண்டும் சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்துகொண்டு இருந்துள்ளார்.
அதன்பிறகு இதயத்தில் நீ படத்தில் தொடங்கி, எம்.ஜி.ஆர் சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருக்கும் ஹிட் பாடல்களை கொடுத்துள்ள கவிஞர் வாலி, கண்ணதாசனுக்கு இணையாக புகழ்பெற்றுள்ளார். இதற்காக கடந்த 2012-ம் ஆண்டு வாலிப வாலி என்ற பெயரில், பொதிகை தொலைக்காட்சியில் கவிஞர் நெல்லை ஜெயந்தா மற்றும் பத்மா சங்கர் ஆகிய இருவரும் பேட்டி எடுத்துள்ளனர்.
இந்த பேட்டியை புத்தமாக வெளியிடும் விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டள்ளது. இந்த விழாவில் வாலி குறித்து ஒரு பாடலை எழுதி பதிவு செய்து ஒலிபரப்ப வேண்டும் என்று முடிவு செய்த கவிஞர் நெல்லை ஜெயந்தா இதுகுறித்து வாலியிடம் கூறியுள்ளார். அவர் வேண்டாம் என்று கூறியிருந்தாலும், இவர் கண்டிப்பாக பாடல் எழுதி வெளியிட வேண்டும் என்று பிடிவாதத்துடன் பாடலை எழுதி பதிவு செய்து விழாவில் ஒலிபரப்ப தயாராகியுள்ளார்.
அப்படி இருக்கும்போது ஒருநாள் வாலி இவரை அழைத்து அந்த பாடல் எற்கே நான் கேட்க வேண்டாமா என்று கேட்க, வாலிக்காக, கவிஞர் நெல்லை ஜெயந்தா அந்த பாடலை ப்ளே செய்து காட்டியுள்ளார். இதில் கோடி கோடி கனவோடு கோடம்பாக்கம் சென்றாய், கண்ணதாசன் கண்ணெதிரே கொடி நாட்டி வென்றாய் என்ற வரிகள் வந்துள்ளது. இதை கேட்ட வாலி, கடுமையாக கோபத்துடன், யார் யாரை வென்றது, கண்ணதாசனை நான் எப்படி வெல்ல முடியும் உடனடியாக இந்த வரிகளை மாற்று என்று கூறியுள்ளார்.
இதற்கு கவிஞர் நெல்லை ஜெயந்தா விளக்கம் கொடுத்த பின்பும், முடியாது என்று விடாப்பிடியாக வாலி மறுக்க வேறு வழியில்லாமல், அந்த பாடல் வரிகளை மாற்றியுள்ளார். மாற்றியபிறகு, கோடி கோடி கனவோடு கோடம்பாக்கம் சென்றாய், கண்ணதாசன் கொடியோடு கொடி நாட்டி நின்றாய் என்று மாற்றி அமைத்து பதிவு செய்துள்ளார். அதன்பிறகு வாலியின் அனுமதியுடன் இந்த பாடல் ஒலிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.