இன்றைய காலக்கட்டத்தில் கவிஞர் கண்ணதாசன் பலராலும் போற்றப்பட்டாலும் அவர் பெரியதாக அறிமுகம் இல்லாத காலக்கட்டத்தில் தன்னை அவமதித்த நடிகைக்கு பின்னாளில் தனது பாடலின் மூலமே பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ் திரையுலகில் காலத்தை வென்ற கவிஞர்கள் பட்டியலை எடுத்தக்கொண்டால் அதில் முக்கிய இடம் கவியரசு கண்ணதாசனுக்கு உண்டு. தனது பாடல் வரிகளின் மூலம் வாழ்க்கையின் தத்துவங்களை உணர்த்திய கண்ணதாசன், மனிதனின் அத்தனை உணர்ச்சிகளுக்கும் தனது பாடல் மூலம் பதில் கூறியுள்ளார்.
எம்.ஜி.ஆர் சிவாஜி உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுக்கு தனது வரிகள் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்த கண்ணதாசன், எழுத்தாளர், திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர் இயக்குனர் என பன்முக திறமை கொண்டனர். பல திறமைகளை உள்ளடக்கி இருந்தாலும் கண்ணதாசன் தனது பாடல்கள் மூலமாகவே மக்கள் மத்தியில் பிரபலமானார்.
அதேபோல் க்ளாசிக் சினிமாவின் முடிசூடா ராணியாக திகழ்ந்தவர் தான் நடிகை பானுமதி. சினிமாவில் இவருக்கு தெரியாத துறைகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு பலவற்றையும் தெரிந்துகொண்ட பன்முக திறமைசாலி. இவரது நடிப்பில் 1952-ம் ஆண்டு ஜூபிட்டர் பிச்சர்ஸ் தயாரித்த படம் ராணி. இந்த படத்திற்காக பாடல் எழுத கண்ணதாசன் அழைக்கப்படுகிறார்.
அப்போது கண்ணதாசன் அவ்வளவாக அறிமுகம் இல்லாத காலக்கட்டம். இந்த படத்தின் இசையமைப்பாளர் சி.ஆர்.சுப்புராமனுக்கு கண்ணதாசன் பாடல் எழுதுவது பிடிக்கவில்லை. ஆனாலும் தயாரிப்பு நிறுவனம் கேட்டுக்கொண்டதால் ஒப்புக்கொள்கிறார். இந்த படத்திற்கான முதல் பாடலை கண்ணதாசன் எழுத, அதை படித்து பார்த்த பானுமதி என்ன பாட்டு இது என்னால் இதை பாட முடியாது என்று சொல்லி அவமதித்து விடுகிறார்.
தயாரிப்பு நிறுவனம் இது நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படம். பத்மினி சொல்லாமல் எதுவும் நடக்காது என்று சொல்ல, மற்றொரு பாடலை எழுதி தருகிறார் கண்ணதாசன். அந்த பாடலும் பிடிக்கவில்லை. இதை பார்த்த சி.ஆர்.சுப்புராமன் இதற்கு தான் உடுமுலை நாராயண கவியை பாடல் எழுத வைத்துக்கொள்ளலாம் என்று சொன்னேன் என சொல்ல கண்ணதாசனுக்கு கோபம் வந்துவிடுகிறது. அவரை மாதிரி ஆயிரம் கவிஞர்களை என்னால் உருவக்க முடியும் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார் கண்ணதாசன்.
அதேபோல் தமிழே தெரியாத ஒரு நடிகை அழகு தமிழில் எழுதிய பாடலை குறை சொல்வதா என்று யோசித்த கண்ணதாசன், இந்த உலகத்திற்கு தன்னை நிரூபிக்க வேண்டும் என்று சபதம் எடுக்கிறார். ஆண்டுகள் பல கடக்கிறது. கண்ணதாசன் வசனகர்த்தா, பாடல் ஆசிரியர் என முன்னேற்றம் கண்டு தமிழ் சினிமாவின் முன்னணி அடையாளமாக மாறிவிடுகிறார்.
இந்த நிலையில், கவிஞர் கண்ணதாசனின் அண்ணன் ஏ.எல்.சீனிவாசன் 1957-ல் அம்பிகாபதி என்ற படத்தை எடுக்கிறார். அப்போது முன்னணி கவிஞர்களாக இருந்த பலரும் இந்த படத்தில் பாடல் எழுதியிருந்த நிலையில், மீதமிருந்த ஒரு பாடல் கவிஞர் கண்ணதாசனுக்கு ஒதுக்கப்பட்டது. இந்த பாடலை பானுமதி பாட வேண்டும். தன்னை வர்ணித்து காதலன் எழுதிய ஒரு கவிதையை இளவரசி படிக்கிறார் என்பதே படத்தின் சூழல்.
இந்த சூழலுக்கு கண்ணதாசன் எழுதிய பாடல் பானுமதியின் கைக்கு வருகிறது. இந்த பாடலை படித்து பார்த்த பானுமதி அதில் இருந்த தமிழ் நடை, வர்ணனை இதையெல்லாம் பார்த்து பிரமித்து போகிறார். இதனால் இந்த பாடலை எழுதிய கவிஞரை நான் உடனடியாக பார்க்க வேண்டும் என்று சொல்கிறார். அதன்பிறகு கண்ணதாசளை அழைக்க அவர் பானுமதியின் முன் வந்து நிற்கிறார்.
அவரை பார்த்த பானுமதிக்கு ஆச்சர்யம். பழைய சம்பங்களை நினைத்து பார்த்த பானுமதி அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் இந்த பாடலை பற்றி சொல்கிறார். அவரின் பாராட்டுக்களை கேட்டு முடித்த கண்ணதாசன், இப்போ இந்த பாட்டு நல்லா இருக்குனு சொல்லி பாராட்டுறீங்க, சில வருஷத்துக்கு முன்னால ராணி படத்தில் நான் எழுதிய ஒரு பாடலை வாங்கி பார்த்துவிட்டு, இதெல்லாம் ஒரு பாட்டா நான் பாடமாட்டேன் என்று போயீட்டீங்க என்று கூறியுள்ளார்.
இதை கேட்டு திகைத்து போன பானுமதி வெட்கத்தில் தலைகுணிந்தார். அதேபோல் இந்த பாடலின் கடைசியில் பானுமதி என்ற பெயர் வருவது என்னை புகழ்வதற்கா என்று கேட்டபோது இல்லை, பானு என்றால் சூரியன் மதி என்றால் சந்திரன் அதை சுட்டிக்காட்டவே இதை எழுதினேன் என்று கூறியுள்ளார் கண்ணதாசன்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“