தமிழ் சினிமாவில் மனிதனின் அத்தனை உணர்ச்சிகளுக்கும் தனது வரிகள் மூலம் உயிர்கொடுத்தவர் என்றால் அவர் கண்ணதாசன் தான். இன்பம், துன்பம், சோகம், அழுகை, ஏமாற்றம் என அத்தனைக்கும் தனித்தனியாக பல பாடல்களை கொடுத்துள்ள கண்ணதாசன், தன் வாழ்க்கையில் சந்தித்த பல சம்பவங்களை பாடல்களில் வைத்து ஹிட் கொடுத்துள்ளார்.
Advertisment
அதேபோல் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கும் இவருக்கும் இடையே நெருங்கிய நட்பு இருந்தது. இருவரும் இணைந்து எம்.ஜி.ஆர் தொடங்கி ரஜினிகாந்த் வரை பல முன்னணி நடிகர்களுக்கு ஹிட் பாடல்களை கொடுத்துள்ளனர். கண்ணதாசன் மற்ற இசையமைப்பாளர்களுடனும் இணைந்து பாடல்களை ஹிட்டாக கொடுத்துள்ளார். அந்த வகையில் ஒரு பாடல் நானும் ஒரு பெண் என்ற படத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த பாடலை கவியரசர் கண்ணதாசன் கழிவறையில் அமர்ந்து சிகரெட் அட்டையில் எழுதி எடுத்து வந்ததாக ஏ.வி.எம்.நிறுவனத்தின் குமரன் கூறியுள்ளார்
1963-ம் ஆண்டு ஏ.சி.திரிலோகச்சந்தர் இயக்கத்தில் வெளியான படம் நானும் ஒரு பெண். எஸ்.எஸ்.ராஜேந்திரன், விஜயகுமாரி, ரங்காராவ், எம்.ஆர்.ராதா, நாகேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தில், தனக்கு வரும் மருமகள் மிகவும் அழகாக இருக்க வேண்டும் என்று விரும்பும் ஒரு ஜமீன்தாருக்கு அவரது மருமகள் கருப்பாக வந்துவிடுவார். இதனால் அந்த ஜமீன்தார் மருமகளை வெறுக்க, அவரோ கிருஷ்ணன் முன்பு தனது குறைகளை சொல்லி பாடுவது போன்ற ஒரு பாடல். இந்த பாடல் எப்படி வர வேண்டும் என்று இசையமைப்பாளர் சுதர்சனிடம், ஏ.வி.எம்.குமரன் சொல்ல, அதன்படி அவரும் டியூனை போட்டு கொடுத்துள்ளார்.
பாடல் எழுத வந்த கண்ணதாசன், என்ன இப்போ நான் டியூனுக்கு தான் பாட்டு எழுதனுமா என்று கேட்க, ஆமாம் சார் டியூனுக்கு எழுதனும் என்று ஏ.வி.எம்.குமரன் கூறியுள்ளார். அதன்பிறகு சுதர்சன் டியூனை வாசிக்க, அதை கேட்ட கண்ணதாசன், பாடல் மனதில் இருக்கிறது. இங்கு டாய்லெட் எங்கே இருக்கிறது என்று கேட்டுள்ளார்.
Advertisment
Advertisements
அதன்பிறகு டாய்லெட் சென்ற கண்ணதாசன், பாடலை சிகரெட் அட்டையில் எழுதி, கொண்டு வந்து சுதர்சனிடம் கொடுத்துள்ளார். இதை பார்த்த இசையமைப்பாளர் சுதர்சன், எங்கு எழுதினீர்கள் என்று கேட்க, எங்க எழுதினாதான் என்ன, டியூனுக்கு சரியாக வருதானு பாரு என்று கண்ணதாசன் சொல்ல, சுதர்சன் பார்த்துவிட்டு சரியாக இருக்கிறது என்று கூறியுள்ளார். அப்படி வந்த பாடல் தான் ‘’கண்ணா கருமை நிற கண்ணா’’ என்ற பாடல். இந்த தகவலை ஏ.வி.எம்.குமரன் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“