படத்தின் ஹீரோ குடித்துவிட்டு நடந்து வரும்போது அவனை போலீஸ் பிடிக்காமல் விட்டுவிடுகிறது. இதை வைத்து ஒரு பாடல் எழுதிய கண்ணதாசன் பாடல் முழுவதும் காவல் என்ற வார்த்தையை பயன்படுத்தி அசத்தியிருப்பார்.
Advertisment
தமிழ் சினிமாவில் மனித உணர்ச்சிகளின் அனைத்திற்கும் தனது பாடல்கள் மூலம் பதில் அளித்தவர் தான் கண்ணதாசன். காதல், இன்பம், சோகம், அழுகை, வெறுப்பு என அனைத்து உணர்ச்சிகளுக்கும் தனது வரிகளால் உயிர்கொடுத்த கண்ணதாசன், தனது பாடல்களில் வித்தியாசமான சில முயற்சிகளை மேற்கொள்வதும் உண்டு. அப்படி எழுதிய பல பாடல்கள் அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்துள்ளன.
அந்த வகையில் மணப்பந்தல் என்ற படத்தில் கண்ணதாசன் எழுதிய காவல் பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 1961-ம் ஆண்டு வி.என்.ரெட்டி இயக்கத்தில் வெளியான படம் மணப்பந்தல். அசோகன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், சரோஜா தேவி, இ.வி.சரோஜா உள்ளிட்ட பல நடித்திருந்த இந்த படத்திற்கு எம்.எஸ்.வி இசையமைக்க, கண்ணதாசன் பாடல்கள் எழுதியிருந்தார்.
அண்ணன் தம்பியான அசோகன், எஸ்.எஸ்.ஆர் இருவரில் தம்பியான எஸ்.எஸ்.ராஜேந்திரனை காதலிக்கும், சரோஜா தேவிக்கு துரதிஷ்டவசமாக அவரது அண்ணன், அசோகனுடன் திருமணம் முடிந்துவிடும். இதன் பிறகு மனைவியின் காதலை பற்றி தெரிந்துகொள்ளும் அசோகன், குடித்துவிட்டு வீதியில் நடந்து வருகிறார். அப்போது வரும் பாடல் என்று கண்ணதாசனுக்கு சுட்சிவேஷன் சொல்லப்படுகிறது.
இந்த சுட்சிவேஷனை கேட்ட கண்ணதாசன், ஹீரோ குடித்துவிட்டு வருகிறான். அவனை போலீஸ் பிடிக்கவில்லையா? இப்போது மதுவிலக்கு அமலில் உள்ளது அதனால் தான் கேட்கிறேன் காட்சியில் போலீசை காட்டுவீர்களா என்று கேட்க, இயக்குனர் வி.என்.ரெட்டி, அதற்கென்ன காட்டிவிட்டால் போச்சு என்று சொல்ல, அதை வைத்தே கண்ணதாசன் பாடலை எழுதியுள்ளார். அந்த பாடல் தான் ‘’உடலுக்கு உயிர் காவல்’’ என்ற பாடல்.
காவல் என்ற வார்த்தையுடன் தொடங்கும் இந்த பாடலின் வரிகள் ஒவ்வொன்றும் காவல் என்ற வார்த்தையிலேயே முடியும் வகையில் கண்ணதாசன் அமைத்திருப்பார். இந்த பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், கண்ணதாசனின் அழியாத பாடல்களின் வரிசையில் இடம்பெற்று வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“