கண்ணதாசன் எழுதி எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்து பி.சுசிலா பாடிய ஒரு பாடலை கேட்ட இந்தியாவின் மிக சிறந்த பாடகியான லதா மங்கேஷ்கர், அந்த பாடலை 16 எம்.எம்.பிரிண்ட் போட்டு வாங்கி சென்றுள்ளார்.
Advertisment
1961-ம் ஆண்டு பீம்சிங் இயக்கத்தில் வெளியான படம் பாவமன்னிப்பு. சிவாஜி கணேசன், தேவிகா, ஜெமினி கணேசன், சாவித்ரி ஆகியோர் இணைந்து நடித்திருந்த இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் – ராமமூர்த்தி இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். கவியரசர் கண்ணதாசன் இந்த படத்திற்காக அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார்.
தமிழ் சினிமாவில் இயக்குனர், தயாரிப்பாளர், கவிஞர், திரைக்கதை வசனகர்த்தா என பன்முக திறமை கொண்ட கண்ணதாசனுக்கு சினிமாவில் பாடல் பாட வேண்டும் என்று ஆசை இருந்துள்ளது. இந்த பாவ மன்னிப்பு படத்தின் கம்போசிங் நடைபெற்றபோது, ‘’மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்’’ என்ற படலை எழுதிய கண்ணதாசன், தானே பாட விரும்பியுள்ளார்.
எம்.எஸ்.விஸ்வநாதனிடம் சென்று. விசு இந்த பாடலை நானே பாடுகிறேன். நான் பாடும் அளவுக்கு எளிமையாக டியூன் போடு என்று கூறியுள்ளார். இதை கேட்ட எம்.எஸ்.வி, இங்கு பாடுவதற்கு நிறையபேர் இருக்காங்க அண்ணே நீங்கள் பாடல் மட்டும் பாடுங்க என்று சொல்ல, கண்ணதாசனும் அதுவும் சரிதான் ஒன்று ஒப்புக்கொண்டுள்ளார். அதன்பிறகு படத்திற்கான அனைத்து பாடல்களையும் எழுதி கொடுத்துள்ளார்.
இதில் குறிப்பாக ‘’அத்தான் என்னைத்தான்‘’ என்ற பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பி.சுசிலா இந்த பாடலை அற்புதமாக பாடியிருந்தார். ஒரு பெண் தனது காதலனை பற்றி தனது தோழியிடம் சொல்வது மாதிரியான இந்த பாடலை ஒரு பெண்ணின் இடத்தில் இருந்து கண்ணதாசன் சிறப்பாக எழுதியிருந்தார். இந்த பாடலை கேட்ட, இந்திய சினிமாவின் முன்னணி பாடகியாக இருந்த லதா மங்கேஷ்கர், இப்படியும் ஒரு பாட்டா என்று இந்த பாடலை 16 எம்.எம்.பிரிண்ட் போட்டு வாங்கி சென்றுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“