பாடல் வரிகள் பிறக்க காரணமாக இருந்த எம்.எஸ்.விக்கு பரிசு கொடுக்க முன் வந்த கவியரசர் கண்ணதாசன், ஒரு சிறிய திருத்தம் செய்துவிட்டு உனக்கு பரிசு கிடையாது என்று கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் க்ளாசிக் ஹிட் பாடல்களை எடுத்துக்கொண்டால் அதில் எம்.எஸ்.விஸ்வநாதன் – கவியரசு கண்ணதாசன் கூட்டணியில் உருவான பல பாடல்களை சொல்லலாம். இவர்கள் இருவரும் இணைந்து எம்.ஜி.ஆர் சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருக்கும் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளனர். அதேபோல் இவர்களுக்கு இடையேயான உறவு தமிழ் சினிமாவில் இன்றும் பெருமையாக பேசப்படும் ஒரு நிகழ்வாக உள்ளது.
மேலும் எம்.எஸ்.விஸ்வநாதன் நடித்த காதல் மன்னன் படத்தில் கூட அவர் கவியரசு கண்ணதாசன் குறித்து புகழ்ந்து பேசி நடித்திருப்பார். படத்தில் அவர் வைத்திருக்கும் மெஸ்க்கு கூட கண்ணதாசன் மெஸ் என்றே பெயரிட்டிருப்பார். இவர்களுக்கு இப்படி ஒரு நட்பு இருந்தாலும் எம்.எஸ்.வி கண்ணதாசன் இடையே சில சுவாரஸ்யமாக சம்பவங்களும் நடந்துள்ளது.
அந்த வகையில் கடந்த 1972-ம் ஆண்டு வெளியான நீதி படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில் நடந்துள்ளது. சிவாஜி கணேசன், ஜெயலலிதா, சவுக்கார் ஜானகி, ஆகியோர் நடித்த இந்த படத்தில 5 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த 5 பாடல்களையுமே எம்.எஸ்.வி இசையில் கவியரசு கண்ணதாசன் எழுதியுள்ளார். இதில் டி.எம்.சௌந்திரராஜன் பாடிய நாளை முதல் குடிக்க மாட்டேன் பாடல் உருவான விதம் குறித்து எம்.எஸ்.விஸ்வநாதன் கூறியுள்ளார்.
இந்த பாடலுக்கான மெட்டை எம்.எஸ்.வி போட்டு கொடுத்துள்ளார். இதை கேட்ட கண்ணதாசன் என்னடா இப்படி போட்டா நா எப்படி வார்த்தைகளை போடுவது என்று கூறியுள்ளார். ஆனால் அருகில் இருந்த இயக்குனர் தயாரிப்பாளர் இருவரும் நான் போட்ட மெட்டுக்கு பாட்டு வாங்கி விட வேண்டும் என்று நினைத்தனர். அதனால் அந்த மெட்டை மாற்ற வேண்டாம் என்று கூறியுள்ளனர்.
இதனால் அதே மெட்டுக்கு பாட்டு எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட கண்ணதாசன், எம்.எஸ்.வியிடம் நீதான் மெட்டு போட்டு விட்டு அதற்கு டம்மி வார்த்தைகளை கொடுப்பல இதற்கு அப்படி ஏதாவது வார்த்தை வச்சிருக்கியா என்று கேட்டுள்ளார். அப்போது எம்.எஸ்.வி ‘’இன்று முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம், இன்று ராத்திரிக்கு தூங்க வேண்டும் ஊத்திக்கிறேன் கொஞ்சம்’’ என்று பாடியுள்ளார்.
இதை கேட்டு ஆச்சரியப்பட்ட கண்ணதாசன் சூப்பர் என்று கூறி தனது பாக்கெட்டில் கையை விட்டு பணம் எடுத்தால் அதில் ரூ10 இருந்துள்ளது அதை எம்.எஸ்.வியிடம் கொடுக்க வந்த கண்ணதாசன், ஒரு சின்ன திருத்தம் எந்த குடிகாரனும் இன்று முதல் குடிக்க மாட்டேன் என்று சொல்ல மாட்டான் அதனால் அதை நாளை முதல் குடிக்க மாட்டேன் என்று மாற்றிக்கொள் என்று கூறியுள்ளார்.
கண்ணதாசனின் பேச்சை கேட்ட எம்.எஸ்.வி நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியடி தங்கம். இன்று ராத்திரிக்கு தூங்க வேண்டும் ஊத்திக்கிறேன் கொஞ்சம் என்று பாடியுள்ளார். இதை கேட்டு அனைவரும் பாராட்டியுள்ளனர். அப்போது எம்.எஸ்.வி கண்ணதாசனிடம் அந்த பரிசு ரூ10 கேட்டபோது, கண்ணதாசன் பாடலில் முக்கியமான வார்த்தையை நான் தான் மாற்றினேன் உனக்கு பரிசு தர முடியாது போடா என்று சொல்லிவிட்டதாக எம்.எஸ்.வி நகைச்சுவையுடன் கூறியுள்ளார் .
இதுபோன்று கண்ணதாசன் – எம்.எஸ்.விஸ்வநாதன் இடையெ பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்துள்ளது. அதேபோல் இவர்கள் இருவரும் இணைந்து இசையமைத்தால் அந்த படத்தின் பாடல்கள் பெரிய வெற்றியை பெறும் என்பது எழுதப்படாத விதி என்று வரும் கூறுவது உண்டு.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.