அரியகுளம் பெருமாள் மணி
கன்னட மொழியில் வெளியான காந்தாரா என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. மிகச் சிறிய பட்ஜெட்டில் தயாரான இந்த திரைப்படத்தின் வெற்றி பல்வேறு தளங்களிலும் பேசும் பொருளாக மாறி உள்ளது. மொழி மாற்றம் செய்யப்பட்டு இந்தியா முழுவதும் இந்தத் திரைப்படம் வெளியிடப்பட்டது.
நிலமும், சிறு தெய்வமும் தான் இந்த படத்தின் மையக்கரு. மன அமைதி தேடி போகின்ற மன்னர் ஒருவர் கானகத்தில் உறையும் சிறு தெய்வம் ஒன்றினை கண்டடைகிறார். மனிதர் ஒருவர் மேல் இறங்கும் தெய்வமும் அரசரும் ஒப்பந்தம் ஒன்றை செய்து கொள்கின்றனர். அதன்படி பெரு நிலப்பரப்பை சிறு தெய்வத்தை வணங்கும் மக்களுக்கு தானமாக வழங்குகிறார் மன்னர்.
அடுத்து வரும் மன்னர் தலைமுறையில் ஒருவர் நிலத்தின் மீது தனக்கு இருக்கக்கூடிய உரிமையை மீட்டெடுக்க விரும்புகிறார். தெய்வத்தோடு நேரடியாக பேசுவது போன்ற காட்சி அமைப்பில் தெய்வத்தின் இருத்தலை கேள்விக்கு உள்ளாக்குகிறார். தெய்வம் அரச வாரிசுக்கு தன்னை உணர்த்தி தானும் மறைகிறது.
நிலத்தை தானமாக கொடுத்த மன்னருடன் ஒரு முறை, நிலத்தை திருப்பி கேட்கும் மன்னரின் வாரிசுடன் ஒரு முறை என தெய்வம் இரண்டு முறை உரையாடுவது போல காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும். பெருந்தெய்வ கோயில்களில் வழிபடுபவருக்கும் கருவறைக்கும் இடையே பூஜை செய்ய அர்ச்சகர்கள் உண்டு. குலதெய்வ மரபில் அதனை வழிபடும் மக்கள் கூட்டத்திலிருந்தே பூசாரிகளும், சாமியாடிகளும் வருவர். உச்சகட்ட வழிபாட்டின் போது சாமியாடிகளின் மூலம் தெய்வம் பக்தர்களிடம் நேரடியாக பேசி குறைகளை கேட்டு அருள் வாக்கு கொடுக்கும் வழக்கம் இன்னமும் தென் மாநிலங்களில் உள்ளது. தெய்வம் மக்களுடன் நேரடியாக உரையாடும் என்பதை காந்தாரா திரைப்படம் காட்சிப்படுத்திய விதமே இந்தத் திரைப்படத்தின் பரவலான வெற்றிக்கு முக்கிய காரணம்.
காந்தாரா திரைப்படத்தில் வரும் வனத்துறை அதிகாரி அரசின் சட்ட திட்டங்களை கடுமையாக அமல்படுத்த துடிக்கிறார். அதிகாரிக்கும் மக்களுக்கும் இடையே முட்டல் மோதல் ஏற்படுகிறது, அந்த அதிகாரியின் செயலில் உள்நோக்கம் எதுவும் இல்லை சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே உள்ளது. காட்டின் வரைபடத்தை கையில் வைத்துக்கொண்டு மக்களின் ஒவ்வொரு செயலிலும் வன அதிகாரி பாத்திரம் தலையிடுகிறது. வாழ்வாதாரத்தை, வழிபாட்டை சட்ட திட்டத்திற்குள் அடைக்க முற்படும் நபராக அதிகாரி விளங்குகிறார்.
எளிய மக்களோடு இணக்கமாக இருப்பதாக காட்டிக் கொள்ளும் மன்னர் பரம்பரையின் வாரிசு குயுக்தியான வழியில் நிலத்தை அபகரிக்க முயற்சி செய்கிறார். தன்னை நம்பிய மக்களை ஏமாற்றி நிலத்தை அபகரித்து அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த திட்டமிடுகிறார் வாரிசு. படத்தின் உச்சகட்ட காட்சியில் மனித ஆற்றல்கள் செயலிழந்த பின் தெய்வம் மக்களுக்காக களத்தில் இறங்குகிறது. திரைப்பட அனுபவத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திய சாமர்த்தியம் இந்த இடத்தில் தான் நிகழ்கிறது.
நாட்டார் தெய்வங்களுடன் தென் மாநில குடும்பங்கள் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு வகையில் பிணைக்கப்பட்டிருக்கும், பிள்ளைகளுக்கு காது குத்துதல், மொட்டை போடுதல் போன்ற பிறப்பு சடங்குகளை குலதெய்வக் கோவிலில் செய்கிற வழக்கம் இன்றும் உள்ளது. ஏதேனும் தீர்க்க முடியாத சிக்கல் என்றால் குலதெய்வத்தை வழிபட செல்வதும் அருள் வாக்கு கேட்பதும் கிராமங்களை நீங்கி நகரங்களில் வசிக்கும் மக்களிடம் கூட இன்றும் தொடர்கிறது.
வெளிநாடுகளில் வெளி மாநிலங்களில் வசிக்கிறவர்கள் கூட வாய்ப்பு கிடைக்கும் போது குலதெய்வத்தை குடும்பத்துடன் தரிசனம் செய்ய முயற்சி விரும்புகின்றனர், இன்றும் திருமண அழைப்பிதழ்களில் தாங்கள் வழிபடுகிற சிறு தெய்வங்களின் பெயரை அச்சிடுவதை பலரும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். குலதெய்வத்திற்கு அருகில் வசிக்க முடியாவிட்டாலும் தங்கள் வாழ்வில் குலதெய்வத்திற்கான இடத்தை மக்கள் இன்றளவும் மனதில் பேணிப் போற்றி வருகின்றனர், சுப காரியங்களை தொடங்குகிற போதும், இக்கட்டான காலகட்டங்களிலும் தூரத்திலிருக்கும் குலதெய்வத்தை மனதார வேண்டி கொள்கின்றனர்.
தான் முந்துரும் தெய்வமாக குலதெய்வம் விளங்கும் என்ற பரவலான நம்பிக்கையை உச்சகட்ட காட்சியில் காட்சிப்படுத்தியதன் காரணத்தினால் பெரும்பாலானவர்கள் காந்தரா திரைப்படத்தை தங்கள் மனதிற்கு நெருக்கமான ஒன்றாக உணர்ந்தனர். தன்னை கையெடுத்தவர்களுக்காக சீறி வரும் தெய்வம் தீமையை அழித்து நல்வினை புரிகிறது. மன்னருடன் பேசி அருள் புரிந்து மன அமைதி தந்த தெய்வம், தன் மக்களுக்கு பாதிப்பு என்ற உடன் உக்கிரம் கொண்டு எழுகிறது. இந்த கருத்தாக்கம்தான் படத்தின் பெரு வெற்றிக்கு காரணம்.
பக்தனிடம் பேசுகிற, பக்தனுக்காக சண்டை இடுகிற காந்தாரா நேரில் வந்த தெய்வம்.
(கட்டுரையாளர் அரியகுளம் பெருமாள் மணி எழுத்தாளர் மற்றும் ஊடகவியலாளர் ஆவார்)
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/