தமிழ் சினிமாவில் காதல் திரைப்படங்களை வரிசைப்படுத்தினால் அதில் முன்னணியில் இடம்பிடிக்கும் படங்களில் ஒன்று காதல்கோட்டை. 1996-ம் ஆண்டு வெளியான இந்த படத்தில், அஜித், தேவயானி, ஹீரா, தலைவாசல் விஜய், மணிவண்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தேவா இசையமைத்த இந்த படத்திற்கு தங்கர் பச்சான் ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்த படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
தமிழ் சினிமாவில் பெரிய வெற்றிப்படங்களில் ஒன்றாக மாறிய காதல்கோட்டை படத்திற்கு தேசிய விருது வழங்கப்பட்டது. அஜித்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்திருந்தது. ஆனால் இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் அஜித் குமார் இல்லை என்பது பலரும் அறியாத ஒரு தகவல். அஜித் நடிப்பில் வெளியான வான்மதி படத்தை இயக்கிய இயக்குனர் அகத்தியன் அடுத்து ஒரு கதையை தயார் செய்துள்ளார்.
இந்த படத்தில் ஒரு புதுமுக நடிகரை நடிக்க வைக்க வேண்டும் என்று விரும்பிய அகத்தியன். அப்போது வளர்ந்து வரும் இளம் நடிகராக இருந்த விஜய் நாயகனாக நடித்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்து அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரை சந்தித்து கதையை கூறியுள்ளார். கதை அவருக்கு மிகவும் பிடித்துபோனது. ஆனாலும் விஜய் அப்போது சில படங்களில் கமிட் ஆகி இருந்ததால், அவர் இந்த படத்திற்கு கால்ஷீட் கொடுக்க 6 மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்று எஸ்.ஏ.சி கூறியுள்ளார்.
எஸ்.ஏ.சி இப்படி கூறியதால், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த அகத்தியன் உடனடியாக தனது வான்மதி படத்தின் நாயகன் அஜித்தையே இந்த படத்திற்கு கமிட் செய்துள்ளார். அதேபோல் இந்த படத்திற்கு முதலில் நாயகியாக நடிக்க இருந்தவர் நடிகை அஞ்சு அரவிந்த். அப்போது அவர் அருணாச்சலம் படத்தில் ரஜினிகாந்தின் தங்கையாக நடித்து வந்ததால், இந்த படத்தின் வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டார். இதன் காரணமாக காதல்கோட்டை வாய்ப்பு நடிகை தேவயானிக்கு கிடைத்துள்ளது.
தனது சினிமா வாழ்க்கையின் தொடக்கத்தில், காதல் கோட்டை, காதல் மன்னன் மற்றும் அவள் வருவாளா என காதல் படங்களில் நடித்து வெற்றி பெற்று தமிழ் சினிமாவில் காதல் ஹீரோவாக வெற்றி பெற்றிருந்த அஜித், 1999-ம் ஆண்டு வெளியான அமர்களம் படத்தின் மூலம் தன்னை ஒரு ஆக்ஷன் ஹீரோவாக நிலைநிறுத்திக்கொண்டார். அதேபோல் காதல் கோட்டை இந்தியில் சிர்ஃப் தும் என்றும், கன்னடத்தில் யாரே நீனு செலுவே, பெங்காலியில் ஹோதத் பிரிஷ்டி என ரீமேக் செய்யப்பட்டு வெற்றியை குவித்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“