தேர்தல் காலம் வந்தால் நாடே பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும். அரசியல் தலைவர்கள் தங்களது வேட்பாளர்களின் வெற்றிக்காக, வீடு வீடாக சென்று வாக்கு கேட்பது, எதிர்கட்சிகளின் குறையை ஆழமாக சுட்டிக்காட்டுவது, மக்களோடு மக்களாக சேர்ந்து இருப்பது, தொண்டரின் வீட்டில் உணவு அருந்துவது என பல நிகழ்வுகளை காணலாம். அதே சமயம் தேர்தல் முடிந்துவிட்டால் அவர்கள் காரில் இருந்து இறங்கி வருவார்களா என்பதே கேள்விக்குறியாக இருக்கும்.
Advertisment
குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் தேர்தல் நேரத்தில் ஓட்டுக்காக ஏழை மக்களின் வீடுகளில் உணவு சாப்பிட்ட தலைவர்கள் பலரும், தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு, அந்த மக்களை கண்டுகொள்ளாத நிலைதான் நாட்டில் நிலவி வருகிறது. மேலும் தேர்தல் நேரத்தில் மக்களை சந்திப்பது போன்று கள்ளஓட்டு போடுவதும், ஓட்டுக்கு பணம் கொடுப்பது போன்ற சம்பவங்கள் வழக்கமாக நடைபெறும் ஒரு நிகழ்வாக மாறிவிட்டது.
அந்த காலக்கட்டம் தற்போது இந்தியாவில் நிகழ்ந்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்காக முதற்கட்ட வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ந் தேதி நடைபெற உள்ளது. அரசியல் கட்சியின் தலைவர்கள் பலரும் தங்களது வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், நாளையுடன் பிரச்சாரம் முடிவடைய உள்ளது. இந்த நேரத்தில் தேர்தலில் நடக்கும் மோசடிகளை வைத்து வாலி எழுதிய ஒரு பாடல் தான் நினைவுக்கு வருகிறது.
பாருக்குள்ளே நல்ல நாடு என்ற படத்தில் இடம் பெற்ற ‘’ஓட்டு போடுங்க கொஞ்சம் பாத்து போடுங்க‘’ என்ற அந்த பாடல். பொதுவாக பலரும் சிந்தித்து ஓட்டு போடுவதில்லை என்ற கருத்து நிலவி வரும் நிலையில், அப்போதே இதற்கு பதில் கொடுக்கும் வகையில் இந்த பாடலை கவிஞர் வாலி எழுதியிருப்பார். இதில் முதல் சரணத்தில், ‘’சிலர் பேச்சை கேட்டு போட்ட ஓட்டு நாட்டை கெடுக்குங்க’’ என்று எழுதியிருப்பார்.
Advertisment
Advertisement
‘’சேலை வேட்டி கொடுத்து கூட ஓட்டு கேட்பாங்க, தென்னங்கள்ளு கொடுத்து கூட வாக்கு கேட்பாங்க’’ என்றும், சாதி பேரை சொல்லி, தள்ளுரதை தள்ளி, நீதி தேவன் கண்னை கட்டி ஓட்டு கேட்பாங்க என்றும் எழுதியிருப்பார். பல வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட இந்த பாடல் இன்றைய காலக்கட்டத்திற்கும் பொருந்தும் வகையில் அமைந்துள்ளது தான் இதன் தனிச்சிறப்பு. ஜெய்சங்கர் நடிப்பில் தயாரான இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்த நிலையில், டி.எம்.சௌந்திரராஜன் இந்த பாடலை பாடியிருந்தார். துரதிஷ்வசமாக இந்த படம் வெளியாகாமல் போனது.
தமிழகத்தில் ஏப்ரல் 19-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் வாக்களிக்கும் வாக்காளர்கள் இந்த பாடலை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“