தன் வாழ்நாளின் இறுதிவரை வாலிப கவிஞர் என்று போற்றப்பட்ட வாலி, முதன் முதலில் ஒரு படத்திற்கு பாடல் எழுதும்போது, அந்த படமே கைவிடும் நிலைக்கு வந்துள்ளது. அப்போது சக கவிஞர் தான் வாலியை காப்பாற்றியுள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
கவியரசர் கண்ணதாசன் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் அவருக்கு போட்டியாக வந்தவர். இருவருக்கும் இடையில் போட்டி இருந்தாலும், தனிப்பட்ட முறையில் நெருங்கிய நண்பர்களாகவும் இருந்துள்ளனர். அதேபோல் ஒரு கலக்கட்டத்தில் கண்ணதாசன் எழுத வேண்டிய ஒரு பாடல் கவிஞர் வாலிக்கு வந்தது அனைவரும் அறிந்த ஒரு தகவல்.
அதே சமயம் வாலி வாய்ப்பு தேடி அலைந்துகொண்டிருந்த காலக்கட்டத்தில் வாய்ப்பு கிடைக்காத சென்னையை விட்டு கிளம்ப முடிவு செய்தபோது, கண்ணதாசன் எழுதிய ''மயக்கமா கலக்கமா'' என்ற பாடலை கேட்டு, மனம் மாறி மீண்டும் சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்துகொண்டு இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் கற்பகம் படத்தில் பாடல்கள் எழுதி வாலி பிரபலமான நிலையில், எம்.ஜி.ஆர் படங்களுக்கு பாடல்கள் எழுத தொடங்கினார்.
கற்பகம் படத்திற்கு முன்னதாக வாலி, சில படங்களில் பாடல்கள் எழுதியிருந்தாலும், கற்பகம், அவரை ரசிகர்கள் மத்தியில் கொண்டு சென்றது. கற்பகம் படத்திற்கு முன்னதாக 1959-ம் ஆண்டு அழகர்மலை கள்வன் என்ற படத்தில் ஒரு பாடல் எழுதியிருந்த வாலி, அடுத்து, 1961-ம் ஆண்டு சந்திரகாந்த் என்ற படத்தில் எழுதியிருந்தார். இந்த இரு படங்களும் அவருக்கு புகழ் சேர்க்கவில்லை. அடுத்து 1961-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான நல்லவன் வாழ்வான் படத்திற்கு பாடல் எழுதியுள்ளார்.
அறிஞர் அண்ணா திரைக்கதை எழுதிய இந்த படத்தில், எம்.ஜி.ஆர், ராஜசுலோக்சனா, நம்பியார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். டி.ஆர்.பாப்பா இசையமைத்த இந்த படத்திற்கு, மருதகாசி உள்ளிட்ட சிலர் பாடல்கள் எழுதியிருந்த நிலையில், வாலி 2 பாடல்களை எழுதியுள்ளார். ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு தடைகள் காரணமாக நடைபெறாமல் இருந்ததால், வாலி எழுதிய இரு பாடல்களுக்கும் காட்சிகள் படமாக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அப்போது யோசித்த படக்குழுவினர், வாலி புது பையன், நேரம் சரியில்லை என்று தோன்றுகிறது. இந்த பாடல்களுக்கு பதிலாக வேறு பாடலை எழுதி கொடுங்கள் என்று படக்குழு, கவிஞர் மருதகாசியை அனுகியுள்ளனர். வாலியின் பாடல்களை படித்து பார்த்த மருதகாசி, இதை விட சிறப்பாக பாடல் எழுத முடியாது. இந்த பாடலையே படத்தில் பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். அவரின் வார்த்தைகளை தட்ட முடியாத படக்குழுவினர் வாலியின் பாடல்களை படத்தில் சேர்த்துள்ளனர்.
வாலி எழுதிய அந்த இரு பாடல்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், படமும் பெரிய வெற்றிப்படமாக அமைந்து பலரின் பாராட்டுக்களை பெற்றிது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“