தமிழ் சினிமாவில் 5 தலைமுறை நடிகர்களுக்கு பாடல்கள் எழுதி ஹிட் கொடுத்திருந்தாலும், கவிஞர் வாலி பங்கேற்ற முதல் கவியரங்கம் தோல்வியில் முடிந்தது என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனாரின் பாடல்களால் ஈர்க்கப்பட்டு தமிழ் சினிமாவில் பாடல் எழுத வந்த வாலி, கண்ணதாசனுக்கு போட்டியான தன்னை நிலை நிறுத்திக்கொண்டார். பின்னாளில் கண்ணதாசன் – வாலி இடையே தொழிற்போட்டி இருந்தாலும், தனிப்பட்ட முறையில் இருவருக்கும் இடையே நெருங்கிய நட்பு இருந்தது. இதன் காரணமாக நான் இறந்தால் நீதான் கவி பாட வேண்டும் என்று கண்ணதாசனே வாலியிடம் கூறியிருக்கிறார்.
கண்ணதாசன் – எம்.ஜி.ஆர் இடையே இருந்த நெருங்கிய நட்பில் விரிசல் ஏற்பட, எம்.ஜி.ஆர் படங்களுக்கு பாடல் எழுதுவதில் இருந்து கண்ணதாசன் விலகினார். இந்த நேரத்தில் எம்.ஜி.ஆருக்கு ஹிட் பாடல்களை கொடுத்த வாலி, தொடர்ந்து அவரின் படங்களில் பாடல்கள் எழுத தொடங்கினார். இதில் பல பாடல்கள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பாடல்களில் ஜொலித்தாலும் வாலிக்கு தொடக்கத்தில் கவியரங்கத்தில் வெற்றி கிடைக்கவில்லை.
1950-களின் இறுதியில் வாலி பிரபலமாகாத சமயத்தில் திருச்சியில் கலைஞர் கருணாநிதியை சந்தித்துள்ளார். அதன்பிறகு எம்.ஜி.ஆர் படங்களுக்கு பாடல்கள் எழுதி பிரபலமான வாலி, 1966-ம் ஆண்டு கலைஞர் எழுதிய, மணிமகுடம் என்ற நாடகத்தை எஸ்.எஸ்.ராஜேந்திரன் திரைப்படமாக எடுக்கிறார். இந்த படத்திற்கு கருணாநிதி திரைக்கதை எழுத, சுதர்சன் இசையமைக்க, பாடல் கம்போசிங், எஸ்.எஸ்.ராஜேந்திரனின் தோட்டத்தில் நடந்துள்ளது.
அப்போது ஒருநாள் அங்கு கருணாநிதி வர, அவரிடம் வாலியை அறிமுகம் செய்து வைத்துள்ளார் எஸ்.எஸ்.ஆர். அப்போது வாலி – கருணாநிதி இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது, திருச்சி வாணொலி நிலையத்தில் பொங்கல் விழா கவியரங்கத்தில்கலந்துகொள்ளுமாறு வாலியை அழைத்துள்ளார் கருணாநிதி. முதலில் தயங்கிய வாலி பிறகு ஒப்புக்கொண்டு அந்த கவியரங்கத்தில் கலந்துகொள்கிறார். கலைஞர் தலையில் நடைபெற்ற இந்த கவியரங்கத்தில் வாலி பாடிய கவிதைகள் பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை.
இதன் காரணமாக தனது முதல் கவியரங்கத்தில் தோல்வியை சந்தித்த வாலி, எப்படியாவது கவியரங்கத்தில் வெற்றி பெற வேண்டும் என்று முடிவு செய்து அதற்காக வேலைகளில் ஈடுபட்டுள்ளார். அதன்பிறகு, மறைந்த திருப்பனந்தாழ் புலவர் மா.வே.பசுபதி விராலிமலை முருகன் கோவிலில் நடைபெற்ற கவியரங்கத்தில் பங்கேற்க வைத்தார், இந்த கவியரங்கத்தில் வாலி பாடிய கவிதைகள் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த கவியரங்கில் கலந்துகொண்ட கவிஞர் அருள் நாகப்பன், கம்பநாழி சா.கணேசனிடம் வாலியை பற்றி சொல்லி, காரைக்குடி கம்பன் விழா கவியரங்கத்தில், வாலியின் தலைமையில் கவியரங்கம் ஏற்பாடு செய்யப்படுகிறது. அந்த கவியரங்கத்தில் வாலியின் கவிதைகள் கொடி கட்டி பறந்துள்ளது. ‘’குரங்கென்று நினைத்து கொற்றவன் அதன் வாலில் தீவைத்தானே, அது கொளுத்திதோ அவன் ஆண்ட தீவைத்தானே’’ என்று கவிஞர் வாலி பாடிய கவிதைகள் நல்ல வரவேற்பை பெற்றது.
முதல் கவியரங்கத்தில் தோல்வியை சந்தித்த வாலி, பிறகு தன்னை தானே செதுக்கிக்கொண்டு கவியரங்கத்தில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தகக்து.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.