ரங்கராஜன் என்ற பெயர் கொண்ட கவிஞர் வாலி தனது பெயரை வாலி என்று மாற்றிக்கொண்டது ஏன் என்று சக கவிஞர் ஒருவர் கேட்டதற்கு வாலியும் விளக்கம் அளித்த நிலையில், அதற்கு அவர் கிண்டல் செய்ததால் அதற்கு தக்க பதிலடியும் கொடுத்துள்ளார்.
கவியரசர் கண்ணதாசன் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் அவருக்கு போட்டியாக வந்தவர். இருவருக்கும் இடையில் போட்டி இருந்தாலும், தனிப்பட்ட முறையில் நெருங்கிய நண்பர்களாகவும் இருந்துள்ளனர். அதே சமயம் வாலி வாய்ப்பு தேடி அலைந்துகொண்டிருந்த காலக்கட்டத்தில் வாய்ப்பு கிடைக்காத சென்னையை விட்டு கிளம்ப முடிவு செய்துள்ளார்.
அந்த சமயத்தில் கண்ணதாசன் எழுதிய ''மயக்கமா கலக்கமா'' என்ற பாடலை கேட்டு, மனம் மாறி மீண்டும் சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்துகொண்டு இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் கற்பகம் படத்தில் பாடல்கள் எழுதி வாலி பிரபலமான நிலையில், எம்.ஜி.ஆர் படங்களுக்கு பாடல்கள் எழுத தொடங்கினார். கற்பகம் படத்திற்கு முன்னதாக வாலி, சில படங்களில் பாடல்கள் எழுதியிருந்தாலும், கற்பகம், அவரை ரசிகர்கள் மத்தியில் கொண்டு சென்றது.
அதன்பிறகு ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆர் - கண்ணதாசன் இடையே மோதல் ஏற்பட்டபோது, வாலி எம்.ஜி.ஆரின் அஸ்தான கவிஞராக உருவெடுத்து, எம்.ஜி.ஆர் திரைத்துறையில் இருந்து விலகும்வரை அவரது படங்களுக்கு பாடல் எழுதியுள்ளார். அதேபோல் தமிழ் சினிமாவில் 5 தலைமுறை நடிகர்களுக்கு தனது வரிகள் மூலம் ஹிட் பாடல்களை கொடுத்துள்ள வாலி, தனது பெயரை ரங்கராஜன் என்பதை வாலி என்று மாற்றிக்கொண்டது ஏன் என்பது குறித்து கவிஞர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
சிறுகதைகள், நாவல்கள் எழுதி பிரபலமானவர் எழுத்தாளர் நா.பார்த்தசாரதி. இவர் ஒருமுறை வாலி என்று உங்கள் பெயரை மாற்றிக்கொண்டது ஏன் என்று கேட்க, அதற்கு பதில் அளித்த வாலி, ராமாயணத்தில் வரும் வாலிக்கு ஒரு வரம் உண்டு. தன் எதிரில் வந்து நிற்பது யாராக இருந்தாலும், அவரது பலத்தில் பாதி வாலிக்கு சென்றுவிடும். இதனால் தான் ராமன் வாலியை மறைந்து கொன்றார். அதேபோல் என் எதிரில் வருபவர்களின் அறிவில் பாதி எனக்கு வர வேண்டும் என்பதால் நான் இந்த பெயரை வைத்துக்கொண்டேன் என்று கூறியுள்ளார்.
இதை கேட்ட நா.பார்த்தசாரதி, உங்களை பார்த்தால் அப்படி ஒன்றும் அறிவு வந்த மாதிரி தெரியவில்லையே என்று சொல்ல, என்ன செய்வது எனக்கு எதிரில் வரும் எல்லோரும் உங்களை போலவே இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே அவ்வப்போது இந்த மாதிரியான வார்த்தை மோதல்கள் வருவது உண்டு என்று நெல்லை ஜெயந்தா குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“