scorecardresearch

100 பாடல்கள் எழுதினால் தீவு வாங்கலாம்…. ஆனால் நான் 7500 பாடல்கள் எழுதிவிட்டேன் – கவிஞர் வைரமுத்து வேதனை

Tamil Cinema Update : ”கலைஞர்கள் பாவம். அவர்கள் கற்பனைவாதிகள். சட்டம் அறியாதோர். உரிமை தெரியாதோர். பூமியில் நின்று கொண்டு நட்சத்திரத்தில் வாழ்வோர்.

100 பாடல்கள் எழுதினால் தீவு வாங்கலாம்…. ஆனால் நான் 7500 பாடல்கள் எழுதிவிட்டேன் – கவிஞர் வைரமுத்து வேதனை

Kavignar Vairamuthu Speech In IPRS ; வெளிநாடுகளில் 100 பாடல்கள் எழுதினால் ஒரு தீவே வாங்கி விடலாம். ஆனால் நான் 7500 பாடல்கள் எழுதியுள்ளேன். ஆனாலும் சில லட்சங்களுக்காக கத்திருக்கிறேன் என்று கவிஞர் வைரமுத்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

சினிமாவில் இசையமைப்பாளர்கள் பாடகர்கள் மற்றும் பாடல் ஆசிரியர்களுக்கு பாடல் குறித்து காப்புரிமை பெற்றுத்தரும் அமைப்பான ஐபிஆர்எஸ் (IPRS) சார்பில்.சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள தனியார் விடுதியில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கவிஞர் வைரமுத்து, பாடலாசிரியர் விவோக, மதன்கார்க்கி உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய கவிஞர் வைரமுத்து கூறுகையில்,

”கலைஞர்கள் பாவம். அவர்கள் கற்பனைவாதிகள். சட்டம் அறியாதோர். உரிமை தெரியாதோர். பூமியில் நின்று கொண்டு நட்சத்திரத்தில் வாழ்வோர். தாய்ப்பாலுக்கும், நிலாப்பாலுக்கும் வேறுபாடு தெரியாதவர்கள். இந்த அமைப்பு வருவதற்கு முன்பு ராயல்டி அல்ல, நாயர் டீ கூட எங்களுக்கு கிடையாது. வெளிநாடுகளில் 100 பாட்டு எழுதினால் அவர் சுவாசிப்பதை தவிர வேறு ஏந்த வேலையும் செய்ய தேவையில்லை.

பசிபிக் கடல் ஓரத்தில் அவரால் தீவு வாங்கி விட முடியும். பணம் தீர்ந்த பிறகு தீவில் இருந்து வெளியில் வந்த மீண்டும் சில பாடல்களை எழுதி அல்லது பாடிவிட்டு சம்பாதித்து மீண்டும் தீவை நோக்கி சென்றுவிட முடியும். ஆனால் 7,500 பாடல் எழுதிவிட்டேன். இவர்கள் அனுப்பும் சில லட்சத்திற்காக காத்திருக்கிறேன். திரைத்துறையில் இருப்போரால் 25 ஆண்டுகள் இருக்க முடியும், அதிலும் 15 ஆண்டுகள்தான் புகழுடன் இருக்க முடியும். கல்லில் நார் உரிப்பது போல இவர்கள் போராடி ராயல்டியை பெற்றுத் தருகின்றனர்.

இசையமைப்பாளர்களும் , பாடலாசிரியர்களும் பாவம். இவர்கள்தான் உருவாக்குபவர்கள், மூலமானவர்கள். எனவேதான் இவர்களுக்கு ராயல்டி வேண்டும் என்கிறோம். 10 ஆண்டுகளுக்கு முன் உச்சத்தில் இருந்தோரை இப்போது உச்சரிக்கவே மறந்துபோன சமூகத்தில் நாம் வாழ்கிறோம். 50 ஆண்டுகளுக்கு முன் இவ்வமைப்பை தோற்றுவித்த எம்.வி. சீனிவாசன் ஒரு கம்யூனிஸ்ட். ஜெயகாந்தனின் தென்னங்கீற்று ஊஞ்சலிலே பாடலுக்கு இசையமைத்தவர். அரசு , நிறுவனம் , நீதிமன்றங்களோடு போராடி இவர்கள் ராயல்டியை பெற்றுத் தருகின்றனர். 300 கோடியை தாண்டி ராயல்டியை பெற்றுள்ளனர்.

குன்றின்மீது நின்று கூவினாலும் ஊடகம் மூலம் சென்றால்தான் அது ஊர் சென்று சேரும். சமூக ஊடகங்களால் செய்திகள் குறித்த நம்பகத்தன்மை குறைந்துவிட்டது. அச்சு ஊடகங்கள் அளவு பிற ஊடகங்களை நம்புவதில்லை என பலர் கூறுகின்றனர். நானும் அச்சு ஊடகங்களை அதிகம் நம்புகிறேன். தொலைக்காட்சி ஊடகங்களும் நம்பகத்தன்மை கொண்ட செய்திகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்” என்று கூறியுள்ளார்..

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema kavignar vairamuthu say about songs royalty issue