கொடைக்கானல் புளியூரை சேர்ந்த பழங்குடியின பெண்ணாக வரும் வீரத்தாயி (கோவை சரளா) தனது பேத்தியுடன் (செம்பி) மலைகளில் கிடைக்கும் மலைத்தேன்,கிழங்கு முதலியவற்றை விற்று அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். அவரது பேத்தி கொடைக்கானலை சுற்றிப் பார்க்க வந்த இளைஞர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறாள். தனது பேத்திக்கு நடந்த அநியாயத்திற்கு எதிராக போராடும் கோவை சரளா குற்றவாளிகள் யார்? என்பதை கண்டுபிடித்து அவர்களுக்கு தண்டனை பெற்று தந்தாரா? இல்லையா? என்பதுதான் செம்பி படத்தின் கதை.
Advertisment
"கோவை சரளா" இதுவரை பல படங்களில்,பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், இப்படம் அவருடைய திரைவாழ்வில் ஓர் மைல்கல்லாக அமைத்துள்ளது. சுருங்கிய தோல்,வயதான தோற்றம்,உடல் மொழி,வசனம் என பழங்குடி பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார். தனது நடிப்புலகின் முதிர்ச்சியையும், அனுபவத்தையும் ஒருசேர கலந்து முதல் பாதி முழுவதும் கலக்கியிருக்கிறார். பேத்திக்கு சிறந்த பாட்டியாகவும், குற்றவாளிகளுக்கு எதிராக போராடும் வீரபென்னாகவும் என பல்வேறு விதமான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார்.
செம்பிக்கு ஆதரவாக வரும் வழக்கறிஞராக "அஷ்வின்" நடித்திருக்கிறார். கதைக்கு தேவையான கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இவர்களுடன் தம்பி ராமையா, நாஞ்சில் சம்பத், பழ.கருப்பையா, ஞான சம்பந்தன் உள்ளிட்டோரும் தங்களது மென்மையான நடிப்பால் திரையையும், திரைக்கதையையும் ஆட்கொள்கின்றனர்.மைனா,கும்கி போன்ற வாழ்வியல் கதைகளை யதார்த்தமாக சொல்லி வெற்றி பெற்ற இயக்குனர் "பிரபு சாலமன்" இப்படத்தில் பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகளையும், அதிகாரத்திற்கும், பணத்திற்கும் அடிபணிந்து சாமானியனுகெதிராக செயல்படும் காவல்துறை என நாட்டில் நடக்கும் உண்மைகளை வேரூரிக்கும் திரைக்கதையில்,மலைவாழ் மக்களின் எதார்த்தத்துடன் சேர்த்து படமாக்கியிருக்கிறார்.
Advertisment
Advertisements
நீட் முதல் பேனர் விபத்து வரை என ஆங்காங்கே மக்களுக்கு தேவையான அரசியல் வசனங்களும் தெறிக்கிறது. செம்பியாக வரும் நிலாவின் நடிப்பு - சிறப்பு. பல இடங்களில் கலங்க வைக்கிறார். நிவாஸ்.கே. பிரசன்னாவின் இசையும், புவனின் ஒளிப்பதிவும் கொடைக்கானல் மலைகளின் கொஞ்சும் அழகையும், மலைப்பாதைகளின் அழகையும் பின்னணி இசையுடன் சேர்ந்து பார்க்க பிரம்மிக்க வைக்கிறது. மொத்தத்தில் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான கருத்துக்களை ஆழமாகவும், அழுத்தமாகவும் சொல்லி இருக்கும் படமே "செம்பி".
நவீன் குமார்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil