/indian-express-tamil/media/media_files/2025/07/07/ksr-rs-2025-07-07-07-47-44.jpg)
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் முக்கியமானவராக இருந்தவர் கே.எஸ்.ரவிக்குமார். 1990-ம் ஆண்டு வெளியான புரியாத புதிர் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர், அந்த படத்தில் சரத்குமார், ரகுமான், ரகுவரன், ஆனந்த்பாபு, ரேகா என அப்போதைய முன்னணி நட்சத்திரங்களை வைத்து சிறப்பாக இயக்கி முதல் படத்திலேயே பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்திருந்தார்
அதனைத் தொடர்ந்து சரத்குமார் நடிப்பில் சேரன் பாண்டியன் படத்தை இயக்கினார். விஜயகுமார், ஆனந்த் பாபு, நாகேஷ் ஆகியோருடன், முக்கியமான வில்லன் கேரக்டரில் கே.எஸ்.ரவிக்குமாரே நடித்திருந்தார். இந்த படமும் பெரிய வெற்றியை பெற்றிருந்தது. அதன்பிறகு, ஊர் மரியாதை, பொண்டாட்டி ராஜ்ஜியம், புருஷ லட்சனம், சக்திவேல் உள்ளிட்ட படங்களை இயக்கிய கே.எஸ்.ரவிக்குமார் 1994-ம் ஆண்டு இயக்கிய படம் நாட்டாமை.
சரத்குமார் இரட்டை வேடங்களில் நடித்திருந்த இந்த படத்தில், ஆச்சி மனோரமா, குஷ்பு, மீனா, சங்கவி, கவுண்டமணி, செந்தில், பொன்னம்பலம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கிராமத்தில் இரு குடும்பங்களுக்கு இடையில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருந்த இந்த படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில், விஜயகுமார் நடித்திருந்தார். இந்த கேரக்டரை பார்த்து வியந்த ரஜினிகாந்த், நாட்டாமை படத்தின் ரீமேக்கான இந்தி, தெலுங்கு, கன்னடம், ஆகிய மொழிகளில் விஜயகுமார் கேரக்டரில் நடித்திருந்தார்.
தமிழ் சினிமாவில் பெரிய வெற்றிப்படமாக அமைந்த நாட்டாமை படத்திற்கு சிறந்த படத்திற்கான தமிழக அரசு விருதும், கே.எஸ்.ரவிக்குமாருக்கு, சிறந்த இயக்குனருக்கான விருதும் வழங்கப்பட்டது. பொதுவாக தயாரிப்பாளர்கள் பட்ஜெட்க்கு தகுந்த வகையில் திரைப்படம் எடுக்கும் இயக்குனர் என்று பெயரெடுத்துள்ள கே.எஸ்.ரவிக்குமார், ஒரு படத்தை 40 நாட்களுக்குள் முடித்துவிடுவார் என்றும் சொல்லப்படுகிறது. அதே சமயம், அவர் கடும் கோபக்காரர் என பலர் கூறியுள்ளனர்.
அந்த வகையில் சமீபத்தில் சரத்குமார் ஒரு நேர்காணலில் கூறுகையில், கே.எஸ்.ரவிக்குமார் படம் என்றாலே 3-4 மைக் இருக்கும். கோபம் வந்தால் மைக்கை தூக்கி அடித்துவிடுவார். அப்படித்தான் ஒருநாள் நாட்டாமை பட ஷூட்டிங்கின்போது, கேமராமேன் மூர்த்தி ரெடியா என்று கேட்க அவர் பார்த்துக்கொண்டே இருந்தார். யோவ் எவ்வளவு நேரம் பார்த்துட்டே இருப்ப என்று கேட்க, இருவருக்கும் இடையெ வாக்குவாதம் ஆகி, மூர்த்தி கேமராவை அப்படியே விட்டுவிட்டு சென்றுவிட்டார். அவரின் உதவியாளரும் கேமராமேன் இல்லாமல் நான் கேமரா ஆப்ரேட் பண்ண முடியாது என்று சொல்லிவிட்டார்.
அப்போது ரவிக்குமார் நான் ஹேன்டில் பண்ணலாமா என்று கேட்க, தாராளமாக பண்ணுங்க என்று சொன்னேன். அப்போது அந்த காட்சியை அவர் தான் கேமராமேன் டைரக்ஷன் செய்து முடித்து வைத்தார். இப்படி அவருக்கு சினிமாவில் தெரியாத பணிகளே இல்லை என்று சொல்லலாம் என சரத்குமார் அந்த நேர்காணலில் தெரிவித்துள்ளார். கே.எஸ்.ரவிக்குமாரின் முதல் படமாக புரியாத புதிர் முதல் அவரின் பல படங்களில் சரத்குமார் ஹீரோவாக நடித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.