தமிழ் சினிமாவில் திறமை இருந்தும் சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் விக்ராந்த். 1991-ம் ஆண்டு மம்முட்டி நடிப்பில் வெளியான அழகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், அடுத்து 2005-ம் ஆண்டு வெளியான கற்க கசடற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ஒரு சில படங்கில் நடித்த இவர், எங்கள் ஆசான் படத்தில் விஜயகாந்துடன் இணைந்து நடித்திருந்தார்.
கோரிப்பாளையம், கவண், தொண்டன், பக்ரீத் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தாலும், இருக்கான வெற்றி கிடைக்கவில்லை. இதனிடையே தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள லால் சலாம் படத்தில் நாயகனாக நடித்துள்ளார். விஷ்ணு விஷால் மற்றொரு நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில், நடிகர் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படம் வரும் பிப்ரவரி 9-ந் தேதி வெளியாக உள்ளது.
லால் சலாம் படத்திற்கான ப்ரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த விக்ராந்த், லால் சலாம் படத்தில், ரஜினிகாந்துடன் நடித்த அனுபவம், அவருடன் பழகியது, மற்றும் தனது சகோதரரும், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருமான விஜய் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். விக்ராந்த் தன்னை ஃபிட்டாகவும், புத்திசாலியாகவும் வைத்திருப்பதால், அவரைப் பற்றி தனது பாராட்டக்களை தெரிவித்துள்ள ரஜினிகாந்த், விஜய்யின் புத்திசாலித்தனத்தையும் பாராட்டியுள்ளார்.
தனது உறவினரான அண்ணனும் பிரபல நடிகருமான விஜய் மீதான மரியாதையை குறித்து விளக்கிய விக்ராந்த், அண்ணனால் பல படங்களை தவற விட்டிருக்கிறேன். பல இயக்குனர்கள் என்னிடம் இந்த படத்தில் ஒரு கேமியோ ரோலுக்கு விஜய்யை சம்மதிக்க வைக்குமாறு அல்லது படத்தின் ப்ரமோஷனுக்கு வருமாறும் கேட்டுள்ளனர். ஆனால் நான் அவ்வாறு செய்ய மறுத்துவிட்டார், ஏனெனில் நான் ஒருபோதும் அண்ணனிடம் (விஜய்) எந்த உதவியும் கேட்கவில்லை.
அவரை சந்திக்கவோ அல்லது புகைப்படம் எடுத்துக்கொள்ளவோ, எனது நண்பர்கள் யாரையும் அழைத்துச் செல்லவில்லை. தான் கேட்பதற்கு முன்பே விஜய் எனக்கு பல வழிகளில் உதவி செய்துள்ளார், ஆனால் நானே அவரிடம் எந்த உதவியும் கேட்டு செல்லவில்லை என்று விக்ராந்த் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“