தொழில்நுட்ப வளர்ச்சி சினிமா துறைக்கு நன்மை தீமை என இரண்டுமே சரி சமமாக கொடுத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். சினிமா பிலிமில் இருந்த காலக்கட்டத்தில் மாதத்திற்கு 10 படங்கள் வெளியானாலே பெரிய விஷயமாக இருந்தது. ஆனால் தற்போது சினிமா டிஜிட்டல் மாயமானதால் வாரத்திற்கு 10 படங்கள் வெளியாகி வருகிறது. படம் எடுப்பதற்கு ஈஸியாக இருந்தாலும் வெளியாகும் படங்கள் வெற்றியை பெறுவது குதிரை கொம்பாக உள்ளது.
நல்ல கதையம்சம் கொண்ட ஒரு படம் ஒரு வருடம் ஓடிய நிலையில் தற்போது எப்படித்தான் விறுவிறுப்பாக சென்றாலும் அந்த படம் ஒரு மாதம் திரையரங்குகளில் ஓடினாலே இப்போது பெரிய விஷயமாக உள்ளது. அதேபோல் ஒரு படம் நன்றாக இருந்தாலும் அடுத்த வாரத்தில் ஒரு பெரிய படம் வெளியாகும் என்ற காரணத்தினால் நல்ல கதையம்சம் கொண்ட சிறுபட்ஜெட் படங்கள் வலுக்கட்டாயமாக தியேட்டர்களில் இருந்து வெளியேற்றப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது.
தற்போது ஆண்டு தோறும் 150-க்கு மேற்பட்ட படங்கள் வெளியாகி வரும் நிலையில், 2023-ம் ஆண்டு பாதி கடந்துவிட்டது. இதுவரை வெளியான படங்களில் வசூலில் சாதனை படைத்த படங்களின் தொகுப்பை பார்க்கலாம்.
பொன்னியின் செல்வன் 2
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், கடந்த ஏப்ரல் 28-ந் தேதி பொன்னியின் செல்வன் படத்தின் 2-ம் பாகம் வெளியானது. இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்த இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், வசூலில் ரூ345 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாரிசு
முன்னணி நடிகரான விஜய் சில ஆண்டு இடைவெளிக்கு பிறகு குடும்ப உறவுகளை மையப்படுத்திய கதையில் நடித்திருந்தார். தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கிய இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிததிருந்தார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பொங்கல் தினத்தை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதம் வெளியான இந்த படம் ரூ306 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
துணிவு
அதே பொங்கல் தினத்தில் வெளியான அஜித்தின் துணிவு படத்தை எச்.வினோத் இயக்கியிருந்தார். மஞ்சுவாரியார் நாயகியாக நடித்திருந்த இந்த படம் வங்கி கொள்ளை சம்பவத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த படம் பாக்ஸ் ஆபீசில் ரூ 215 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
வாத்தி
தனுஷ் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியான படம் வாத்தி. தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குனர் வெங்கட் அட்லூரி இயக்கத்தில் வெளியான இந்த படம் கல்வியை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. தெலுங்கில் வெற்றிப்படமாக அமைந்த வாத்தி தமிழில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூலில் ரூ 105 கோடி பாக்ஸ்ஆபீஸ் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
விடுதலை பாகம் 1
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்த விடுதலை படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். காமெடி வேடத்தில் நடித்து வந்த சூரி இந்த படத்தில் போலீசாக சீரியஸ் கேரக்டரில் நடித்ததால் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அத்தனை எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்த விடுதலை பாக்ஸ்ஆபீஸில் ரூ 60 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
போர் தொழில்
முன்னணி நடிகர் சரத்குமார் இளம் நடிகர் அசோக் செல்வன் கூட்டணியில் வெளியான படம் போர் தொழில். எதிர்பார்ப்பு இல்லாமல் வெளியான இந்த படம் நல்ல விமர்சனங்களை பெற்ற நிலையில், வசூலிலும் சாதனை படைத்துள்ளது. தற்போதுவரை திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் போர் தொழில், பாக்ஸ்ஆபீஸில் ரூ 50 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
பிச்சைக்காரன் 2
பிச்சைக்காரன் முதல் பாகத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து அந்த படத்தின் நாயகன் விஜய் ஆண்டனி இயக்கம் மற்றும் எடிட்டிங்கில் ஒருவான படம் பிச்சைக்காரன் 2. மூளை மாற்று அறுவை சிகிச்சையை மையமான வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருந்த இந்த படம் பாக்ஸ்ஆபீஸில் சுமார் 44 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பத்து தல
கன்னடத்தில் வெளியான மஃப்டி படத்தின் ரீமேக் என்ற அடையாளத்துடன் வெளியான பத்து தல படத்தில் சிம்பு கௌதம் கார்த்திக் இணைந்து நடித்திருந்தனர். மாஃபியா கும்பல் தொடர்பான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், பாக்ஸ்ஆபீஸ் வசூலில் ரூபாய் 38 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.