பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா சரத்குமார், லட்சுமி மேனன், மகிமா நம்பியார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள சந்திரமுகி 2 திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் பலரும் படம் குறித்து தங்களது சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
90-களில் மலையாளத்தில் மோகன்லால் சுரேஷ் கோபி ஷோபனா ஆகியர் நடிப்பில் வெளியான மணிச்சித்திரதாழு படத்தை ஆப்த மித்ரா என்ற பெயரில் பி.வாசு கன்னடத்தில் ரீமேக் செய்திருந்தார். விஷ்ணுவர்த்தன், ரமேஷ் அரவிந்த் சௌந்தர்யா ஆகியோர் நடித்திருந்த இந்த படம் கன்னடத்தில் பெரிய வெற்றிப்படமாக மாறியதை தொடர்ந்து சந்திரமுகி என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்தார் பி.வாசு.
ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்த இந்த படம் தமிழ் சினிமாவில் பெரிய வசூல் சாதனை நிகழ்த்தியது. மேலும் அதிக நாட்கள் ஓடிய தமிழ் படங்களின் பட்டியலிலும் இடம் பிடித்தது. தொடர்ந்து இந்த படத்தின் 2-ம் பாகத்தை கன்னடத்தில் விஷ்ணுவர்த்தன் நடிப்பில் ஆப்த ரக்ஷிதா என்ற பெயரில் எடுத்து வெற்றி கண்ட பி.வாசு தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் சந்திரமுகி 2 என்ற பெயரில் ரீமேக் செய்ய முயற்சித்தார்.
இந்த படத்தில் நடிக்க ரஜினிகாந்த் மறுத்துவிட்ட நிலையில், தற்போது ராகவா லாரன்ஸ் கங்கனா ரனாவத் வடிவேலு உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாரான சந்திரமுகி 2 படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. ஆஸ்கார் விருது பெற்ற எம்.எம்.கீரவாணி இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். தொடர் விடுமுறை நாட்களை முன்னிட்டு சந்திரமுகி 2 படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் பலரும் படம் குறித்து தங்களது கருத்துக்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இதில் ஒருவர் தனது ட்விட்டர் பதிவில், சந்திரமுகி 2 படத்தின் முதல் பாதி பொழுதுபோக்கு உள்ளது. குயின் கங்கனா ரனாவத் இன்றும் வரவில்லை. இடைவேளை காட்சி சிறப்பாக உள்ளது. படத்தில் ட்விஸ்ட் சர்ப்ரைஸ் என விறுவிறுப்பாக போகிறது. கண்டிப்பாக பிளாக்பஸ்டர் ஆகும் என்று பதிவிட்டுள்ளார். மற்றொருவர் கங்கனா ரனாவத் வரும் காட்சிகள் சிறப்பாக இருப்பதாகவும், திரைக்கதை விறுவிறுப்பாக இருப்பதாகவும், கூசும்ப்ஸ் காட்சிகள் நிறைய இருப்பதாகவும், இப்படத்தை திரையரங்கில் பாருங்கள் வடிவேலுவுக்கு ஒரு நல்ல கம்பேக் எனவும் பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“