“காஞ்சனா 3″என்னும் பிளாக்பஸ்டர் படத்திற்கு பிறகு வெளியாகும் லாரன்ஸ் படம் “ருத்ரன்”, எப்படி இருக்கிறது? என்பதை இவ்விமர்சனத்தில் காணலாம்.
கதைக்களம்:
ஐடி நிறுவனத்தில் வேலை செய்து,தன் குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வரும் நாயகன் ருத்ரனுடைய அப்பா திடீரென இறந்து விடுகிறார். தன் அப்பா மிகப்பெரிய கேங்ஸ்டரான சரத்குமாரால் கொல்லப்பட்டிருப்பதை பின்பு அறியும் ருத்ரன், அவரின் இறப்புக்காக சரத்குமாருடைய கும்பலை பழி வாங்கும் கதை தான் ருத்ரன்.
பாஸிட்டிவ்ஸ்:
ராகவா லாரன்ஸ் வழக்கம் போல தன்னுடைய நடிப்பில் காதல், காமெடி, ஆக்சன் சென்டிமென்ட் என அனைத்தையும் கலந்து கொடுத்து அவருடைய ரசிகர்களுக்கு விருந்தளித்திருக்கிறார். மேலும் சரத்குமாருடைய வில்லனிசம் நிறைய இடங்களில் நம்மை பயமுறுத்துகிறது. நாசர்,பூர்ணிமா பாக்யராஜ், ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் தங்களுடைய கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் குமாரின் பாடல்கள், லாரன்ஸ் நடனம் ஆடி ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் அமைந்திருப்பது சிறப்பு. சாம் சி.எஸ்’யின் பின்னணி இசை படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது.
நெகடிவ்ஸ்:
தன் அப்பாவின் இழப்பிற்காக வில்லன் கும்பலை பழிவாங்கும் கதை. இக்கதையை தமிழ் சினிமாவில் நாம் பல வருடங்களாக பார்த்து சலித்து விட்டோம்.அதனாலோ என்னவோ இப்படத்தை எந்த இடத்திலும் ரசிக்க முடியவில்லை. படத்தின் காட்சிகள் அனைத்துமே ஏற்கனவே நாம் பார்த்து பழகிய ஒரு உணர்வை நமக்கு தருவதால் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை நம்மால் எளிதாக யூகிக்க முடிகிறது. மேலும் சண்டைக் காட்சிகள் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் படங்களையே மிஞ்சும் அளவிற்கு ஓவராக அமைந்திருப்பதும் சண்டைக் காட்சிகளின் நீளம் அதிகமாக இருப்பதும் ரசிகர்களின் பொறுமையை சோதிக்கிறது.
மொத்தத்தில் ஓர் பழைய கதையை வைத்துக்கொண்டு கமர்சியல் என்ற பெயரில் பாடல்கள், நடனம், ஆக்சன், சென்டிமென்ட் என அனைத்தையும் கலந்து ஒரு திரைப்படமாக கொடுத்திருக்கிறார்கள். புதுமையாக ரசிப்பதற்கோ, எதிர்பார்ப்பதற்கோ எதுவும் இல்லாமலிருக்கும் திரைக்கதையால் நம்மால் பெரிய அளவில் திரைக்கதைக்குள் ஒன்ற முடியவில்லை என்பதே உண்மை.
நவீன் குமார்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil