Tamil Cinema Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். கடந்த 2004-ம் ஆண்டு நடிகர் தனுஷை திருமணம் செய்துகொண்ட இவருக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் சமீபத்தில் தனது கணவது தனுஷூம் தானும் திருமண வாழ்வில் இருந்து பிரிவதாக அறிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் தங்களது பணிகளில் தீவிரமாக இறங்கிய நிலையில், தனுஷ் தனது வாத்தி படப்பிடிப்பிலும், ஐஸ்வர்யா தனது இசை ஆல்பத்திற்கான பணிகளிலும் ஈடுபட்டனர். ஏற்கனவே தனது கணவர் தனுஷை வைத்து 3 மற்றும் கவுதம் கார்த்திக்கை வைத்து வை ராஜா வை என 2 படங்களை இயக்கியுள்ள ஐஸ்வர்யா 3-வதாக பயணி என்ற இசை ஆல்பத்தை இயக்கியுள்ளார்.
தமிழ் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட 4 மொழிகளில் தயாராகியுள்ள இந்த ஆல்பத்திற்கு அன்கித் திவாரி இசையமைத்துள்ளார். இதில் தமிழில் அனிருத், தெலுங்கில் சாகர், இந்தியின் அன்கித் திவாரி, மலையாளத்தில், ரஞ்சித் கோவிந்த் ஆகியோர் பாடியுள்ளனர். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த இசை ஆல்பத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்த நிலையில், இசை ஆல்பம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.
இதனையடுத்து இந்த இசை ஆல்பம் இன்று மாலை 4.44 மணிக்கு வெளியாகும் என்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நேற்று அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது 9 வருடங்களுக்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள இந்த இசை ஆல்பத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு அளித்து வருகின்றனர்.
இந்த ஆல்பம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ள நடிகர் ரஜனிகாந்த், 9 வருடங்களுக்கு பிறகு ஐஸ்வர்யா இயக்கத்தில் பயணி இசை ஆல்பம் வெளியானது மகிழ்ச்சி. நீங்கள் எப்போதும் நலமுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். உங்களை மிகவும் நேசிக்கிறேன். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil