விவசாயி படப் பாடல்: எளிய மக்களை போய்ச் சேர எம்.ஜி.ஆர் சொன்ன ஐடியா
இயக்குனர் தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட எம்.ஜி.ஆர், சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வந்த காலக்கட்டத்தில் நடிகர் எம்.ஆர்.ராதாவால் துப்பாக்கியால் சுடப்பட்டார்.
தமிழ் சினிமாவில் துணை நடிகராக இருந்து பின்னாளில் ஹீரோவாக வளர்ந்து ஒரு கட்டத்தில் சினிமாவை தன் பக்கத்தில் வைத்திருந்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நாடக நடிகராக இருந்து சினிமாவிற்கு துணை நடிகராக இருந்த இவர், 10 வருட இடைவெளிக்கு பிறகு சினிமாவில் நாயகாக உயர்ந்தார். அதன்பிறகு படிப்படியாக பல வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்து மக்கள் செல்வாக்கையும் பெற்றிருந்தார்.
Advertisment
நடிகராக மட்டுமல்லாமல், இயக்குனர் தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட எம்.ஜி.ஆர், சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வந்த காலக்கட்டத்தில் நடிகர் எம்.ஆர்.ராதாவால் துப்பாக்கியால் சுடப்பட்டார். தொண்டடையில் சுட்டதால், அவரால் பேச முடியாது. இனி அவரின் சினிமா வாழ்க்கை அவ்வளவு தான் என்று அவரின் எதிரிகள் முடிவு செய்துவிட்டனர்.
மேலும் அவரை வைத்து படம் தயாரித்துக்கொண்டிருந்த தயாரிப்பாளர்கள் இவர் எப்போது மீண்டும் வந்து நடிப்பது என்று நினைத்து அவரை பார்க்க யாருமே வரவில்லை. ஆனால் எம்.ஜி.ஆரின் நண்பரும் தயாரிப்பாளருமான சின்னப்ப தேவர், கோவிலுக்கு சென்று எம்.ஜி.ஆருக்காக வேண்டிக்கொண்டு அங்கிருந்து விபூதி எடுத்து வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எம்.ஜி.ஆரின் நெற்றியில் பட்டை அடித்துள்ளார்.
அதன்பிறகு நீங்கள் விரைவில் தேறி வந்துவிடுவீர்கள். நீங்கள் வந்தவுடன் நாம் படம் பண்றோம். ஒரு படம் அல்ல 2 படம் பண்றோம் என்று சொல்லிவிட்டு கட்டுக்கட்டாக பணத்தை எடுத்து எம்.ஜி.ஆரின் அருகில் வைத்துவிட்டு இன்னும் பத்தவில்லை என்றால் கேளுங்கள் என்று சொல்லிவிட்டு சென்றுள்ளார். அதன்பிறகு தேறி வந்த எம்.ஜி.ஆர் சொன்னபடி சின்னப்ப தேவரின் மறுபிறவி, மற்றும் விவசாயி என இரு படங்களில் நடிக்கிறார்.
இதில் மறுபிறவி படம் தயாராவதற்காக, சினிமாவை விட்டு விலகி விவசாயம் பார்த்துக்கொண்டிருந்த கவிஞர் மருதகாசியை அழைத்த எம்.ஜி.ஆர், மறுபிறவி என்ற ஒரு படம் பண்றோம் எனக்கு மட்டும் அல்ல உங்களுக்கும் இது மறுபிறவியாக இருக்க வேண்டும் உடனே கிளம்பி வாருங்கள் என்று சொல்ல, எம்.ஜி.ஆர் பேச்சை தட்டாமல் அவரும் சென்னை வந்து சேர்க்கிறார். ஆனால் அப்போது மறுபிறவி படத்தின் வேலைகள் இல்லாமல் விவசாயி படத்தின் வேலைகள் நடைபெறுகிறது.
இந்த படத்திற்காக 3 பாடல்களை எழுதிய மருதகாசி படத்தின் முதல் பாடலாக வந்த விவசாயி விவசாயி என்ற பாடலை கொடுத்து அசத்தினார். விவாசாயின் நிலை, உழைப்பின் அவசியம் உள்ளிட்ட தத்துவங்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட இந்த பாடல் அனைவருக்கும் பிடித்திருந்தது. அதனால் படத்தின் டைட்டில் கார்டு போடும்போதே இந்த பாடல் வர வேண்டும் என்று தயாரிப்பாளர் சின்னப்ப தேவர் உட்பட அனைவரும் விரும்பியுள்ளனர்.
இந்த பாடல் நல்ல பாடல் அனைவருக்கும் பிடிக்கும். ஆனால் படம் தொடங்கி 5 நிமிடம் கழித்து இந்த பாடல் வரட்டும் என்று கூறியுள்ளார். ஏன் என்று கேட்க, எனது ரசிகர்கள் அனைவரும் கூலி தொழிலாளிகள், நேரத்திற்கு தியேட்டர் வருவார்கள் என்று சொல்ல முடியாது. அவர்கள் தங்கள் வேலைகளை முடித்தவிட்டு தான் வர முடியும். தாமதமாக வருபவர்கள் இந்த பாடலை தவறவிட்டுவிட்டோமே என்று நினைக்க கூடாது. அதனால் படம் தொடங்கி 5 நிமிடங்களுக்கு பிறகு பாடல் வரட்டும் என்று கூறியுள்ளார்.
அவர் சொன்னபடியே படம் 5 நிமிடங்களுக்கு பிறகு வரும் இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் இன்றும் ரசிக்கக்கூடிய ஒரு பாடலாக உள்ளது. அதே போல் ‘’என்ன வளம்இல்லை இந்த திருநாட்டில்’’‘’ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்’’ ஒழுங்காய் பாடுபடு வயக்காட்டில்’’ உயரும் உன் மதிப்பு அயல்நாட்டில் என்ற வரிகள் இன்னும் உதாரணமாக சொல்லப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“