தமிழ் சினிமாவில் நடிப்புக்கு முக்கிய உதாரணம் என்று சொன்னால் அவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான். ஆனால் அவருக்கே பெரிய இன்ஸ்பிரேஷனாக இருந்தவர் எம்.ஆர்.ராதா. நாடக உலகில் கொடிகட்டி பறந்த எம்.ஆர்.ராதா அதன்பிறகு சினிமாவில் நடிக்க வந்தார். சினிமாவில் முக்கிய வேடங்களில் நடித்து வந்தபோதும், நலிவடைந்துள்ள நாடக கம்பெனிகளை தூக்கி நிறுத்தும் வகையில் அவர்களின் நாடகளிலும் நடித்து வந்துள்ளார்.
அப்படி நாடகங்களில் நடிக்கும்போது தான் சிவாஜிக்கு அவருடன் பழக்கம் ஏற்பட்டு பின்னாளில் சிவாஜி பெரிய நடிகராக உயர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிகவேல் என்று போற்றப்படும் எம்.ஆர்.ராதா பல படங்களில் வில்லன் குணச்சித்திரம் என்று பல தரப்பட்ட வேடங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த ரத்தக்கண்ணீர் படம் இன்றும் ஒரு முக்கிய திரைப்படமாக பார்க்கப்படுகிறது.
அதேபோல் க்ளாசிக் சினிமாவில் பல படங்களில் நாயகியாக நடித்திருந்தாலும் ஒரு கட்டத்தில் அம்மா நடிகையாக புகழ் பெற்றவர் கே.ஆர். விஜயா. பல ரஜினி கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கே அம்மாவாக நடித்திருந்த கே.ஆர்.விஜயாவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. 90-ஸ் ரசிகர்கள் மத்தியில் கே.ஆர்.விஜயா முக்கிய பிரபலமாக இருந்து வருகிறார்.
அதே சமயம் கே.ஆர். விஜயாவின் உண்மையான பெயர் தையல் நாயகி. ஒருமுறை படப்பிடிப்பில் இருந்தபோது எம்.ஆர்.ராதா உன் பெயர் என்ன என்று கேட்க தையல் நாயகி என்று கூறியுள்ளார். அது என்ன தைய தக்கனு இப்படியெல்லாம் பெயர் வைத்தால்எப்படி சினிமாவில் முன்னுக்க வர முடியும். இன்றிலிருந்து உன் பெயர் விஜயா. உன் அப்பா மற்றும் அம்மா இன்ஷியலை சேர்த்து கே.ஆர்.விஜயா என்று வைத்துக்கொள் என தெரிவித்துள்ளார்.
எம்.ஆர்.ராதா பெயரை மாற்றிய நேரம் கே.ஆர்.விஜயாவுக்கு பட வாய்ப்பு குவிந்த நிலையில், தனது கடைசி காலம் வரை படங்களில் நடிப்பை தொடர்ந்து வந்தார். இன்றைய காலக்கட்டத்தில் தையல் நாயகி என்றால் தெரியாத நிலையில், எம்.ஆர்.ராதா வைத்த கே.ஆர்.விஜயா என்ற பெயர் சினிமாவில் அனைவரும் அறிந்த ஒரு பெயராக மாறிவிட்டது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“