பாடல்களை விரைவாக உருவாக்குவதற்கு பெயர் பெற்ற இளையராஜா தன்னை வருத்திக் கொண்டு, ஒரு பாடலை உருவாக்கியுள்ளார். அந்த பாடல் எது என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழ் சினிமா இசை உலகின் ஜாம்பவான்களில் தவிர்க்க முடியாதவர் இளையராஜா. 80, 90களில் இவரது கால்ஷீட்டுக்காக ஏங்காத இயக்குனர்களே இல்லை என்று கூறுவார்கள். இதுவரை ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள இளையராஜா, 7000க்கும் மேற்பட்ட பாடல்களையும் உருவாக்கியுள்ளார்.
இளையராஜாவின் இசைக்கு மயங்காதவர்கள் இல்லை என்று கூறும் அளவிற்கு ஏராளமான ரசிகர்கள் இவருக்கு. இன்றும் பலருக்கு இரவில் இனிமையான துக்கத்திற்கு இளையராஜா பாடல்கள் வேண்டும்.
இளையராஜா பாடல்களை விரைவாக உருவாக்குவதில் வல்லவர். பாடல்கள் என்றாலும் பின்னணி இசை என்றாலும், காட்சியை கூறிய சிறிது நேரத்திலே இசையை வழங்கிவிடுவார்.
அப்படிப்பட்ட இளையராஜாவே தன்னை வருத்திக் கொண்டு, சற்று நேரம் எடுத்துக் கொண்டு உருவாக்கிய பாடல் ஒன்று உள்ளது. ஒரு இசை நிகழ்ச்சியில், நீங்கள் இசையமைக்க அதிக நேரம் எடுத்துக் கொண்ட பாடல் எது? என ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த இளையராஜா இந்த சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துக் கொண்டுள்ளார்.
இந்தப் பாடலுக்கு தான் சற்று அதிக நேரம் எடுத்துக் கொண்டேன். நானாக என்னை வருத்திக் கொண்டேன். பாட்டு முதலிலே வந்துவிட்டது. ஆனால் நானாகவே என்னை வருத்திக்கிட்டேன், 2-3 மணி நேரம் எடுத்து இசையமைத்தேன் என்று கூறி இளையராஜா அந்தப் பாடலை பாடியிருப்பார்.
அப்படி இளையராஜா தன்னை வருத்திக் கொண்டு உருவாக்கிய பாடல் ‘பாடு நிலாவே தேன் கவிதை’. 1985ல் வெளிவந்த உதயகீதம் படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை கவிஞர் மு.மேத்தா எழுதியிருப்பார். எஸ்.பி.பி மற்றும் எஸ்.ஜானகி இருவரும் பாடியிருப்பார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“