கண்ணதாசன் – எம்.எஸ்.வி கூட்டணியில் வெளியான பாடல்களை தமிழ் சினிமாவின் பொக்கிஷம் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு, இசையும் பாடலும் இணைந்த இந்த கூட்டணியில் வெளியான பல பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்த நிலையில், மனிதனின் அத்தனை உணர்ச்சிகளுக்கும் கண்ணதாசன் தனது வரிகள் மூலம் உயிர் கொடுத்துள்ளார்.
கண்ணதாசன் முதன் முதலில் சினிமாவில் பாடல் எழுதிய திரைப்படம் கன்னியின் காதலி. இந்த படத்திற்கு இசையமைத்த சி.ஆர்.சுப்புராமன், எஸ்.எம்.சுப்பையா நாயுடு ஆகியோரிடம், உதவியாளராக இருந்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். பாடல் எழுத வரும் கவிஞர்களுக்கு டியூனை வாசித்து காட்டி பாடல் எழுதி வாங்கிக்கொள்வது தான் எம்.எஸ்.வி வேலை.
அந்த வகையில் கன்னியின் காதலி படத்தில் முதன் முதலாக பாடல் எழுத வாய்ப்பினை பெற்ற கண்ணதாசன், ‘’கலங்காதிரு மனமே’’, ‘’புவி ராஜா’’ என இரண்டு பாடல்களை எழுதி கொடுத்துள்ளார். அடுத்ததாக 3-வது பாடலுக்கான டியூனை எம்.எஸ்.வி வாசிக்க, இதற்கு பாடல் எழுத முயற்சித்த கண்ணதாசனுக்கு சரியாக வார்த்தைகள் அமையாத நிலையில், 3 நாட்களாக போராடியுள்ளார்.
இரவு பகலாக முயற்சித்து ‘’காரணம் தெரியாமல் உள்ளம் கலிகொண்டே கூத்தாடுதே’’ என்ற பாடலை எம்.எஸ்.விஸ்வநாதனிடம் கொடுத்துள்ளார்.
இதனை பார்த்த எம்.எஸ்.விஸ்வநாதன்,அது என்ன கலி கூத்து என்று. இந்த வார்த்தைகளை மாற்றி தாருங்கள் என்று கூறியுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த அப்போதைய முன்னணி கவிஞரான உடுமலை நாராயணகவி, ‘’காரணம் தெரியாமல் உள்ளம் சந்தோஷம் கொண்டாடுதே’’ இதை வாசி என்று கூறியுள்ளார். இதை வாசித்த எம்.எஸ்.வி சரியாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.
முதன் முதலாக பாடல் எழுதிய கண்ணதாசனுக்கு மெட்டு வாசித்து காட்டிய எம்.எஸ்.வி பாடல் நன்றாக இல்லை மாற்றுங்கள் என்று சொல்ல, இவர்களின் முதல் சந்திப்பே மோதலில் முடிந்துள்ளது. அதன்பிறகு பின்னாளில், கண்ணதாசன் – எம்.எஸ்.வி இடையே நெருங்கிய நட்பு உருவாகி பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“