விஜய் நடித்துள்ள லியோ படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், படத்தின் இணை இயக்குனர் ரத்னகுமார் உள்ளிட்ட படக்குழுவினர் திருப்பதி கோவிலுக்கு நடந்து சென்ற வீடியோ பதிவு இணயைத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள படம் லியோ. இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில், செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19-ந் தேதி வெளியாக உள்ளது.
இதனிடையே லியோ படத்தின் இயக்குனர் லோகேஷ், இணை இயக்குனர் மற்றும் எழுத்தாளராக ரத்னகுமார் லியோ படக்குழுவினருடன் திருப்பதிக்கு சென்றுள்ளார். திருப்பதியில் பாத யாத்திரை செல்லும் படிக்கட்டுகளில் இருந்து இயக்குனர் ரத்னகுமார் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு தற்போது இணயைத்தில் வெளியாகியுள்ளது. லியோ படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இந்த திருப்பதி பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
திருப்பதியில் கடந்த சில மாதங்களாக சிறுத்தை புலி நடமாட்டம் அதிகரித்து வருவதன் காரணமாக பாத யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பாக கைத்தடி கொடுத்து அனுப்பப்படுகின்றனர். அதன்படி லியோ படக்குழுவினர் அனைவரும் கையில் கைத்தடியுடன் பயணித்து வரும் நிலையில், சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் இவ்வளவு பாதுகாப்பாக அழைத்து செல்கிறார்கள் என்று ரத்னகுமார் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோவில் படக்குழுவினர் அனைவரும் கோவிந்தா... கோவிந்தா.. என்று கோஷம்போட்டுக்கொண்டே மலையேறி வருகின்றனர். தரிசனத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் லோகேஷ், லியோ படம் நன்றாக வந்துள்ளதாகவும், அடுத்து தலைவர் 171 படத்திற்கான வேலைகளை தொடங்க உள்ளதாகவும் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“