திரையுலகில் இணைந்து நடிக்கும் ஒரு சிலர் ரியல் வாழ்க்கையிலும் இணைந்துள்ளனர். அதே சமயம் நாயகியாக நடித்து வரும் நடிகைகளுக்கு திருமணம் ஆகிவிட்டால் அடுத்து அவர்களுக்கு சினிமாவில் முக்கிய கேரக்டர்களில் நடிக்கதான் வாய்ப்புகள் கிடைக்குமே தவிர நாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைப்பது அரிதான ஒரு விஷயம். ஆனாலும் இதை பொருட்படுத்தாமல் தன்னுடன் நடித்த சக நடிகரை திருமணம் செய்துகொண்ட சில நடிகைகள், தங்களுக்கென ஒரு பிராண்டை உருவாக்கியுள்ளனர்.
அந்த வகையில் காதலர் தினத்தை முன்னிட்டு, காதலித்து திருமணம் செய்துகொண்ட தமிழ் சினிமா ஜோடிகள் சிலரை பார்ப்போம்
அஜித் – ஷாலினி
தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக இருந்த நடிகர் அஜித், கடந்த 1999-ம் ஆண்டு சரண் இயக்கத்தில் வெளியான அமர்க்களம் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் நாயகியாக நடித்த நடிகை ஷாலினியை காதலித்த அஜித், 2000-ம் ஆண்டு அவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் அஜித் பல வெற்றிப்படங்களை கொடுத்த நிலையில், ஷாலினி நடிப்பில் இருந்து விலகிவிட்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
பிரசன்னா – சினேகா
கடந்த 2009-ம் ஆண்டு அருண் வைத்தியநாதன் இயக்கத்தில் வெளியான அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தில் இணைந்து நடித்த சினேகா – பிரசன்னா ஜோடி, காதலித்து வந்த நிலையில், கடந்த 2012-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு தற்போது இரு குழந்தைகள் உள்ளனர். தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் பட்டாளம் வைத்திருக்கும் ஜோடிகளில் சினேகா – பிரசன்னா ஜோடிக்கு தனி இடம் உண்டு.
ஆர்யா – சாயிஷா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் ஆர்யா, 2018-ம் ஆண்டு கஜினிகாந்த் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் நடிக்கும்போது நாயகியாக நடித்த சாயிஷா மீது காதலில் விழுந்த ஆர்யா, 2019-ம் ஆண்டு அவரை திருமணம் செய்துகொண்டார். தற்போது இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. திருமணத்திற்கு பின் சாயிஷா படங்களில் நடித்து வருகிறார்.
விக்னேஷ் சிவன் – நயன்தாரா
கடந்த 2015-ம் ஆண்டு வெளியான நானும் ரவுடிதான் படத்தை இயக்கிய இயக்குனர் விக்னேஷ் சிவன், அந்த படத்தில் நாயகியாக நடித்த நயன்தாராவுடன் காதலில் விழுந்தார். இவரது காதலை நயன்தாராவும் ஏற்றுக்கொண்ட நிலையில், 7 வருடங்களுக்கு பிறகு இருவரும் கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு தற்போது இரு குழந்தைகள் உள்ளனர்.
கௌதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன்
நடிகர் கார்த்திக்கின் மகன் என்ற அடையாளத்துடன் கடல் படத்தில் அறிமுகமான கெளதம் கார்த்திக், கடந்த 2019-ம் ஆண்டு தேவராட்டம் படத்தில் நடித்தபோது அந்த படத்தில் நாயகியாக நடித்த மஞ்சிமா மோகனுடன் காதல் ஏற்பட்டது. இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு இவர்கள் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின் கெளதம் கார்த்திக் தொடந்து படங்களில் நடித்து வருகிறார்.
அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியன்
2013-ம் ஆண்டு வெளியான சூது கவ்வும் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான அசோக் செல்வன், பழம்பெரும் நடிகரும் தயாரிப்பாளருமான அருண் பாண்டியனின் மகளும் நடிகையுமான கீர்த்தி பாண்டியனை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்கள் திருமணத்திற்கு பின் வெளியான ப்ளூஸ்டார் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அசோக் செல்வன் – கீர்த்தி இருவரும் இணைந்து இந்த படத்தில் நடித்திருந்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“