உதயநிதியின் கடைசி படம் என்பதாலும், வடிவேலுவின் மாறுபட்ட கதாபாத்திரம் கொடுத்த ஈர்ப்பினாலும் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு இன்று வெளிவந்திருக்கும் "மாமன்னன்" படம் மக்களிடையே வரவேற்பை பெற்றதா?
கதைக்களம் :
சமூகநீதி சமத்துவ மக்கள் கழகத்தின் மாவட்டச் செயலாளராக உயர்சாதி வர்கத்தை சேர்ந்த ஃபஹத் பாசில் வருகிறார். அந்தக் கட்சியின் எம்.எல்.ஏ ஆக பட்டியலின சமூகத்தைச் சார்ந்த வடிவேலு வருகிறார். வடிவேலின் மகனாக உதயநிதி ஸ்டாலினும், அவரது காதலியாக கீர்த்தி சுரேஷும் வருகின்றனர். உதயநிதியின் இடத்தில் கீர்த்தி சுரேஷ் நடத்தி வரும் இலவச கல்வி மையத்தை ஃபஹத் பாசில் அண்ணனாக வரும் சுனில் சேதப்படுத்துகிறார்.
இதற்காக பேச்சுவார்த்தை நடத்த வரும் இடத்தில் வடிவேலு சரிசமமாக நடத்தப்படாததை கண்டு கோபமடைந்த உதயநிதி ஃபஹத்தை அடிக்கிறார். இதனைத் தொடர்ந்து கட்சியில் எழும் பிரச்சினையால் ஃபஹத் வேறு கட்சிக்கு செல்கிறார். சட்டசபை தேர்தலும் வருகிறது. ச.ச.ம.க கட்சி சார்பில் வடிவேலு நிற்கிறார். அந்த தேர்தலில் அவர் ஜெயித்தாரா? இல்லையா? என்பது தான் மாமன்னன் படத்தின் கதை.
நடிகர்களில் நடிப்பு :
வடிவேலுவின் திரை வாழ்வில் மிகப்பெரிய மைல்கல் என்றே இப்படத்தை சொல்லலாம். அந்தளவிற்கு இதுவரை நாம் பார்க்காத வகையில் வடிவேலு திரையில் அசைத்திருக்கிறார். பட்டியலின மக்களின் தலைவனாகவே வாழ்ந்திருக்கிறார். எப்போதுமே இறுக்கமாக இருக்கும் அவரது முகமும்,உடல் மொழியும் பல இடங்களில் நம்மை கலங்க வைக்கிறது. மறுபுறம் சாதி வெறி ஊறிய ஒரு கொடூர வில்லனாக திரையில் மிரட்டி இருக்கிறார் பஹத் பாசில்.
என்னதான் ஒரு மலையாள நடிகராக இருந்தாலும்,நம் பொது வாழ்வில் பார்க்கும் ஒரு சாதிய கொடூரனாக அந்த கதாபாத்திரமாகவே படம் முழுவதும் வாழ்ந்திருக்கிறார். அவரை திரையில் பார்த்தாலே ஒருவித பயம் ஏற்படும் அளவிற்கு நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி பிரமிக்க வைக்கிறார். படத்தில் கதாநாயகன் என்பதை விட, ஒரு நல்ல ரோலில் நடித்திருக்கிறார் என்று தான் உதயநிதி நடிப்பை சொல்ல வேண்டும். எதார்த்தமான நடிப்பு தன் அப்பாவின் நிலைமையை கண்டு கொதித்தெழும் அவரது கோபம்,தன் மக்களை நிலையை எண்ணி வருந்தும் காட்சிகள் என அத்தனை காட்சிகளுமே அவருடைய தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறது. உதயநிதியின் திரை வாழ்வில் இதுதான் பெஸ்ட் என சுலபமாக சொல்லி விடலாம். கீர்த்தி சுரேஷ் இருக்கும் ஒரு நல்ல தரமான ரோல் அதை சிறப்பாக செய்திருக்கிறார்.
இயக்கம் மற்றும் இசை :
உயர் ஜாதிக்கும், கீழ் சாதிக்கும் உள்ள வேறுபாட்டையும், கீழ் சாதியினர் படும் துன்பங்களையும் அழுத்தமாக திரையில் காட்டுவதே மாரி செல்வராஜின் ஸ்டைல். அதே பாணியை தான் இப்படத்திலும் அவர் கையாண்டிருக்கிறார். ஆனால் இந்த முறை அவருடைய திரைக்கதையின் அழுத்தம் பல மடங்கு உயர்ந்திருக்கிறது. அவருடைய ஒவ்வொரு காட்சிகளும், வசனங்களும் பட்டியலின மக்களின் வலியையும்,வாழ்க்கை முறையையும் நம் கண் முன்னே காட்டி நம்மை கலங்க வைக்கிறது.
இந்தப் படத்தின் மற்றொரு ஹீரோவாக இருப்பது இசை புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசை. பல இடங்களில் மௌனமான காட்சிகளையும் தன்னடைய பின்னணி இசையின் மூலம் உயிற்கொடுத்திருப்பது பிரமிக்க வைக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக வெறும் கமர்சியல் படங்களிலேயே அவரது இசையை பார்த்த நமக்கு, இப்படத்தில் அவருடைய இசை வேறொரு பரிமாணத்தை கொடுத்திருக்கிறது.
படம் எப்படி :
பட்டியலின மக்கள் அன்றாட வாழ்வில் சந்திக்கும் பல சமூக பிரச்சனைகளில் ஒரு பிரச்சினையை மட்டும் கருவாகக் கொண்டு முழு திரைக்கதையையும் அழுத்தமான வசனங்களுடனும், எதார்த்தமான காட்சிகளுடனும் பல உண்மை சம்பவங்களையும் அடிப்படையாக வைத்து, வடிவேலு என்னும் மகா கலைஞன் மூலம் அந்த மக்களின் வலியை சாமானிய மக்களுக்கும் புரியும்படி அழுத்தமாக சொல்லி இருக்கும் படமே இந்த மாமன்னன். ஆனால் சில இடங்களில் ஒரு சில காட்சிகள் நம்மை முகம் சுளிக்க வைப்பதாக இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட சமூக மக்களின் பிரச்சினைகளை பேசுவதால் எல்லா தரப்பு மக்களுக்கும் இப்படம் பிடிக்குமா என்பது சந்தேகமே?
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“