இயக்குனர் மணிரத்னம் வாழ்க்கையை மாற்றிய படமாக அமைந்த இருவர் படத்திற்கு தனக்கு ஐடியா கொடுத்தது மலையாள சினிமாவின் பிரபல எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் தான் என்று மணிரத்னம் தெரிவித்துள்ளார்.
இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம். இவரது இயக்கத்தில் கடந்த 1997-ம் ஆண்டு வெளியான இருவர் படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், மணிரத்னத்தின் திரை வாழ்க்கையில் அவருக்கு முக்கிய படமாக அமைந்தது. மோகன்லால் பிரகாஷ் ராஜ், ரேவதி, தபு, கவுதமி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தின் மூலம் ஐஸ்வர்யா ராய் திரைத்துறையில் அறிமுகமானார்.
தமிழக அரசியலில் இரு பெரும் துருவங்களாக இருந்த எம்.ஜி.ஆர். கருணாநிதி ஆகியோரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருந்த நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் இரண்டு தேசிய விருதுகளை வென்று அசத்தியது.
மணிரத்னத்தின் திரை வாழ்க்கையில் முக்கிய படமாக அமைந்த இருவர் படத்தின் ஐடியா எம்.டி. வாசுதேவன் நாயர் கொடுத்தது என்று மணிரத்னம் தெரிவித்துள்ளார். கேரளாவில் நடைபெற்ற எம்.டி. வாசுதேவன் நாயரின் நவதி விழாவின் ஒரு பகுதியாக மாத்ருபூமி 'சுக்ருதம்' நிகழ்ச்சி கடந்த ஜூலை 10ஆம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது. இந்த விழாவைத் தொடங்கி வைக்க இயக்குநர் மணிரத்னம் கேரளாவிற்பு சென்றுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய, மணிரத்னம், நான் இயக்கிய இருவர் படத்தின் ஐடியாவை எம்.டி வாசுதேவன் நாயர்தான் எனக்கு கொடுத்தார்.முப்பது வருடங்களுக்கு முன்பு கோழிக்கோடு வந்தேன். அப்போது அவர் ஒரு படத்தின் கதையை எழுதி வைத்திருந்தார். நான் அவரிடம் பம்பாய் படத்தின் கதையை எழுத சொன்னேன். ஆனால் அது நடக்கவில்லை, அதற்குப் பதிலாக இருவர் படத்திற்கான ஐடியாவை எனக்குக் கொடுத்தார். இந்தப் படம் என் வாழ்க்கையை மாற்றியது. அதற்காக நானும் அவருக்குக் கடமைப்பட்டிருக்கிறேன்.
இலக்கிய உலகில் பலர் திரைக்கதை எழுதுகிறார்கள். அதில் எம்.டி. வாசுதேவன் சார் ரொம்ப சீரியஸாக எடுத்துக்கொள்வதுதான் விசேஷம். அவரின் ஒவ்வொரு திரைக்கதையும் பாட புத்தகம் மாதிரி. வசனம் எழுதும் போது அவர் உருவாக்கும் கதாபாத்திரங்களுக்கு ஆத்மா இருப்பதாக நான் நம்புகிறேன். அதனால சார் எழுதிய ஸ்கிரிப்டை சினிமாவாக மாற்ற வேண்டும் என்று ஆசைப்பட்டேன் என மணிரத்னம் கூறியுள்ளார்.
மேலும், ஹேம்லெட்டை நாங்கள் பலமுறை பார்த்து அதை ஒரு திரைப்படமாக உருவாக்கப்பட வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் பல்வேறு காரணங்களால் அது நடக்கவில்லை. வரும் காலங்களில் அவரது திரைக்கதைகளில் ஒன்றை என்னால் திரைப்படமாக்க முடியும் என்று நம்புகிறேன். எம்.டி. வாசுதேவன் சாரை சந்தித்ததற்கும், அவரது படங்களைப் பார்ப்பதற்கும், இன்று இந்த விழாவில் கலந்து கொள்வதற்கும் நான் பெருமைப்படுகிறேன் என்றும் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“