தமிழ் சினிமாவிலும் அரசியலிலும், தனக்கென தனி பாதை வகுத்து அதில் வெற்றி கண்டு, இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்துகொண்டிருக்கும், புரட்சித்தலைவர் எம்.எஜி.ஆரின், 108-வது பிறந்த தினமான இன்று, அவர் தனது கலை வாரிசாக நடிகரும் இயக்குனருமான பாக்யராஜூவை அறிவித்தது ஏன் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் பிறந்த எம்.ஜி.ஆர், தமிழ்நாட்டில் குழந்தை நட்சத்திரமாக நாடகங்கில் அறிமுகமாகி, 1935-ம் ஆண்டு வெளியான சதிலீலாவதி என்ற படத்தின் மூலம் திரையுலகில் துணை நடிகராக அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் முக்கியத்துவமான மற்றும் துணை நடிகராக நடித்திருந்த எம்.ஜி.ஆர், ஒரு படத்தில் ஒரு சண்டைக்காட்சிக்காக மட்டுமே நடித்துள்ளார். 10 வருட இடைவெளிக்கு பிறகு 1947-ம் ஆண்டு ஹீரோவாக உயர்ந்தார்.
ஹீரோவாக வெற்றிப்படங்களை கொடுத்து வந்த எம்.ஜி.ஆர், ஒரு கட்டத்தில் தனது படங்கள் தோல்வியை சந்திக்கும் நிலை ஏற்படும்போது தானே இயக்குனர் தயாரிப்பாளராக களமிறங்கிய நாடோடி மன்னன் என்ற படத்தில் நடித்தார். பெரிய பெருட் செலவில் எடுக்கப்பட்ட இந்த படம், எம்.ஜி.ஆரின் திரை வாழ்க்கையில் முக்கிய வெற்றிப்படமாக இன்றும் போற்றப்பட்டு வருகிறது. நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமையுடன் வலம் வந்த எம்.ஜி.ஆர், அரசியலிலும் தனது தடத்தை பதித்துள்ளார்.
தமிழ் சினிமா, அரசியல் என இரண்டிலும் வெற்றிக்கொடி நாட்டியுள்ள எம்.ஜி.ஆர், தனக்கு நெருக்கமான பல சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் இருந்தாலும், நடிகர், கே.பாக்யராஜூவை மட்டும் தனது கலை வாரிசாக அறிவித்திருந்தார். எம்.ஜி.ஆரின் இந்த அறிவிப்பு அந்த காலக்கட்டத்திலேயே பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பாராதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்த பாக்யராஜ், புதிய வார்ப்புகள் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து சுவரில்லாத சித்திரங்கள், மௌன கீதங்கள், இன்றுபோய் நாளை வா, ஒரு கை ஓசை, தூரல் நின்னு போச்சு உள்ளிட்ட பல படங்களை இயக்கி ஹீரோவாக நடித்து வெற்றி கண்டார். குறிப்பாக பெண் ரசிகைகளுக்கு பிடித்தமான நாயகனாக வலம் வந்த பாக்யராஜ் எம்.ஜி.ஆர், நடித்து பாதியில் நின்றுபோன, அண்ணா நீ என் தெய்வம் என்ற படத்தை கையில் எடுத்துக்கொண்டு தனியாக திரைக்கதை அமைத்து, அவசர போலீஸ் 100 என்ற பெயரில் வெளியிட்டு வெற்றி கண்டார். இந்த படம் மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.
எம்.ஜி.ஆர் பாக்யராஜ் இடையே நெருக்கமான உறவு இருந்தபோது, எனது கலையுலக வாரிசு பாக்யராஜ் தான் என்று எம்.ஜி.ஆர் அறிவித்தார் இது ஏன் என்பது குறித்து தற்போது விளக்கம் அளித்துள்ள பாக்யராஜ், எம்.ஜி.ஆர் என்னை கலை வாரிசு என்று அறிவித்த 2 நாட்களுக்கு பிறகு ஒரு பொதுக்கூட்டத்தில், சினிமாவில் நான் செய்ய பல வருடங்கள் எடுத்துக்கொண்ட செயல்களை இந்த பையன் ஆரம்பித்த சில வருடங்களில் செய்திருக்கிறான்.
எனக்கென்று ஒரு பெரிய மாஸ் வருவதற்கு எனக்கு பல ஆண்டுகள் ஆனாது. ஆனால் இவ்வளவு சின்ன வயதில் பாக்யராஜூவுக்கு அந்த மாஸ் கிடைத்துள்ளது. இதனால் தான் அவரை எனது கலை வாரிசு என்று அறிவித்தேன் என்று தெளிவுபடுத்தியதாக, பாக்யராஜ் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“