எம்.ஜி.ஆர் – சின்னப்ப தேவர் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும், இவர்களுக்கு இடையே ஒருமுறை பெரிய மோதல் ஏற்பட்டது. அதற்கு முக்கிய காரணமாக அமைந்தது சின்னப்ப தேவர் தயாரித்த ஒரு படம் தான் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் நடிப்பில் அதிக படங்களை தயாரித்தவர் என்ற பெருமையை பெற்றவர் சின்னப்ப தேவர். 1956-ம் ஆண்டு வெளியான தாய்க்கு பின் தாரம் என்ற படம் தான் இவர்கள் இருவரும் இணைந்த முதல் படம். இந்த படத்தில் ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக எம்.ஜி.ஆர் சின்னப்ப தேவர் இருவரும் சில வருடங்கள் பேசாமல் இருந்தனர். அதன்பிறகு 1961-ம் ஆண்டு வெளியான தாய் சொல்லை தட்டாதே படத்தின் மூலம் இருவரும் இணைந்தனர்.
இந்த படத்திற்கு பின் எம்.ஜி.ஆர் அரசியலுக்கு சென்றதற்கு பின் நடிப்பில் இருந்து விலகும்வரை சின்னப்பதேவர் எம்.ஜி.ஆர் படங்களை மட்டுமே தயாரித்து வந்தார். அந்த வகையில், 1968-ம் ஆண்டு இவர்கள் இருவரின் கூட்டணியில் வெளியான படம் தான் காதல் வாகனம். ரசிகர்கள் பலரும் அறியாத எம்.ஜி.ஆர் படம் இதுதான். இந்த படம் தொடங்கும்போதே, அந்த வரும் தீபாவளிக்கு இந்த படம் வெளியாகும் என்று அறிவிப்புடன் தான் பூஜை போடப்பட்டுள்ளது.
அந்த நேரத்தில் எம்.ஜி.ஆர் அடிமைப்பெண் படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்புக்காக ஜெய்ப்பூர் செல்ல வேண்டி இருந்ததால், என் தொடர்பான காட்சிகளை விட்டுவிட்டு, மற்ற காட்சிகளை படமாக்குங்கள். நான் வந்தபிறகு என் தொடர்பான காட்சிகளை படமாக்கிக்கொளளலாம் என்று எம்.ஜி.ஆர் ஜெய்பூர் கிளம்பிவிடடார். அவர் சொன்னபடி, மற்ற காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், ஜெய்ப்பூர் படப்பிடிப்பு தாமதமானதால் தீபாவளிக்கு ஒரு வாரத்திற்கு முன்பு எம்.ஜி.ஆர் வந்துள்ளார்.
அப்போது அவர் இடைவிடாத படப்பிடிப்பு காரணமாக சோர்வாக இருந்ததால், சின்னப்ப தேவருக்கு போன் செய்து படத்தின் வெளியீட்டை ஒரு வாரம் தள்ளி வைத்துக்கொள்ளலாமா? இப்போது இருக்கும் சோர்வின் காரணமாக படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியுமா என்பது தெரியவில்லை என்று கூறியுள்ளார். இதை கேட்டு கோபமான சின்னப்ப தேவர், நீங்கள் வந்து நடித்தாலும் சரி நடிக்கவில்லை என்றாலும், என் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று சொல்லிவிட்டு போனை வைத்துள்ளார். ஆனால் சோர்வாக இருந்தாலும், எம்.ஜி.ஆர் இரவு பகலாக அந்த படத்தில் நடித்து 3 நாட்களில் படப்பிடிப்பை முடித்துள்ளார்.
பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான காதல் வாகனம் படம் ரநசிகர்களை கவர தவறிவிட்ட நிலையில், பெரிய தோல்விப்படமாக அமைந்தது. அதே சமயம் சின்னப்ப தேவர் அவ்வளவு கோபமாக பேசியிருந்தாலும், அவருடன் மீண்டும் நட்பை தொடர்ந்தார் எம்.ஜி.ஆர். அதேபோல் தன்னிடம் கோபமாக நடந்துகொண்ட வேறு யாரிடமும் எம்.ஜி.ஆர் மீண்டும் நட்பை தொடர்ந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“