எம்.ஜி.ஆர் துணை நடிகராக நடித்து வந்தபோது, வாள் சண்டையில் மக்கள் தன்னை பாராட்ட வேண்டும் என்று நினைத்த அந்த படத்தின் ஹீரோ எம்.ஜி.ஆரை தாக்க, பதிலுக்கு எம்.ஜி.ஆர் உண்மையாகவே அவருடன் வாள் சண்டையில் மோதி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
நாடக நடிகராக இருந்து தமிழ் சினிமாவில் துணை நடிகராக அறிமுகமானவர் எம்.ஜி.ஆர், தொடர்ந்து 10 வருடங்கள் பல போராட்டங்களுக்கு பிறகு நாயகனாக மாறியவர். அதன்பிறகு பல தடைகளை சந்தித்த அவர், தனது வெற்றிப்படங்களின் மூலம் நிலையான ஒரு இடத்தை பிடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார். ஒரு கட்டத்தில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிய எம்.ஜி.ஆர், தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகனாக மாறியிருந்தார்.
அதே சமயம் துணை நடிகராக இருந்தபோது, பல படங்களில் முக்கிய கேரக்டர் மற்றும் வில்லன் நடிகராகவும் நடித்துள்ள எம்.ஜி.ஆர், கடந்த 1945-ம் ஆண்டு வெளியான சாலிவாகனன் என்ற படத்தில் நடித்திருந்தார். ரஞ்சன் நாயகனாக நடித்திருந்த, இந்த படத்தில் டி.ஆர்.ராஜகுமாரி நாயகியாக நடித்திருந்தார், கண்ணதாசன் திரைக்கதை எழுதிய இந்த படத்தை பி.என்.ராவ் இயக்கியிருந்தார்.
என்.எஸ்.கிருஷ்ணன் மற்றும் டி.ஏ.மதுரம் இணைந்து நடித்த இந்த படத்தில் ஒரு வாள் சண்டை காட்சி இடம் பெற்றிருந்தது. இதில் நாயகன் ரஞ்சனுடன் எம்.ஜி.ஆர் மோத காட்சி படமாக்கப்பட்டது.
இந்த காட்சியில் மக்களிடம் பாராட்டுக்களை பெற வேண்டும் என்பதற்காக, நாயகன் ரஞ்சன், உண்மையாகவே எம்.ஜி.ஆர் மீது வாளை வீச தொடங்கியுள்ளார். இதை தெரிந்துகொண்ட எம்.ஜி.ஆர். கத்தி மேலே படுகிறது பாத்து பாத்து என்று சொல்லிக்கொண்டே இருந்துள்ளனார். எம்.ஜி.ஆரின் பேச்சை கேட்காத ரஞ்சன் தொடர்ந்து, வாளை வீசிய நிலையில், ஒரு கட்டத்தில் கடுப்பான எம்.ஜி.ஆர், உண்மையாகவே வாளை வீச தொடங்கியுள்ளார். மல்யுத்தம், வாள் சண்டை, கத்தி சண்டை என அனைத்து பயிற்சிகளையும் முறையாக பெற்றிருந்த எம்.ஜி.ஆர், வாள் வீச்சை பார்த்த ரஞ்சன் ஒரு கட்டத்தில் தாக்குபிடிக்க முடியாமல், இயக்குனரிடம் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து எம்.ஜி.ஆரிடம் பேசிய இயக்குனர், இந்த படத்தில் அவர் தான் ஹீரோ நீங்கள் எதிர் நாயகன், எவ்வளவு தான் சண்டை போட்டாலும் இறுதியில் நீங்கள் தோற்பது தான் காட்சி. அவடை விடாமல் நீங்கள் அடித்தால் அவர் எப்படி வெற்றிபெறுவார், அதனால் கொஞ்சம் விட்டுக்கொடுங்கள் என்று கூறியுள்ளார். இதை கேட்ட எம்.ஜி.ஆர், அவர் ஒரிஜினலாக சண்டை போட்டார். சொன்னேன் அவர் கேட்கவில்லை. அதனால் தான் நானும் இப்படி செய்தேன் என்று கூறியுள்ளார்.
அதன்பிறகு எம்.ஜி.ஆர் தோற்பது போல் இல்லாமல், சண்டை பாதியில் முடிக்கப்படும் வகையில் காட்சி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர் அவ்வளவு சொல்லியும் ஹீரோ ரஞ்சன் கேட்காததால், கடைசியில் அவர் தொற்பதற்கு பதிலாக சண்டை சமனில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“