வெந்நீர் வைக்க சொன்ன எம்.ஜி.ஆர்... தாமதமான படப்பிடிப்பு : ஒரு தத்துவ பாடலுக்கு இப்படியா!
கடந்த 1966-ம் ஆண்டு வெளியான படம் தான் சந்த்ரோதயம். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எம்.ஆர்.ராதா, நம்பியார் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த படத்தை இயக்குனர் கே.சங்கர் இயக்கியிருந்தார்.
எம்.ஜி.ஆர் நடிப்பில் தயாரான ஒரு படத்தில் பாடல் காட்சி படமாக்க எல்லாம் தயாராக இருந்தபோதும், எம்.ஜி.ஆர் சொன்ன ஒரு மாற்றத்தால் படப்பிடிப்பு தாமதமாக நடந்துள்ளது. ஆனாலும் அந்த தத்துவ பாடல் இன்றும் போற்றப்படும் ஒரு பாடலான நிலைத்திருக்கிறது.
Advertisment
தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பெற்றிருந்தவர் எம்.ஜி.ஆர். இன்றுவரை மக்களால் கொண்டாடப்படும் ஒரு தலைவராக இருக்கும் இவர், ஆரம்ப காலத்தில் தனது படங்களின் மூலம் மக்களின் மனதை கவர்ந்தவர். இதற்காகவே எம்.ஜி.ஆர் தான் நடிக்கும் படங்களில் ஒரு தத்துவ பாடல் இடம்பெறும் வகையில் திரைக்கதை அமைப்பை பார்த்துக்கொண்டார்.
அந்த வகையில் கடந்த 1966-ம் ஆண்டு வெளியான படம் தான் சந்த்ரோதயம். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எம்.ஆர்.ராதா, நம்பியார் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த படத்தை இயக்குனர் கே.சங்கர் இயக்கியிருந்த நிலையில், எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தையும் கவிஞர் வாலி எழுதியிருந்தார். அதுமட்டுமல்லாமல் 2 பாடல்கள் பாரதிதாசன் பாடல்களில் இருந்து எடுக்கப்பட்டிருந்தது.
இந்த படத்தில், மழை பெய்து ஏழை மக்களின் குடிசை வீடுகள் தண்ணீரில் மூழ்கிவிடுவதால், அவர்களை அழைத்துக்கொண்டு எம்.ஜி.ஆர் எம்.ஆர்.ராதாவின் கார் ஷெட்டில் தங்க வைப்பார். ஆனால் எம்.ஆர்.ராதாவோ இது என்னுடைய விலை உயர்ந்த கார் நிற்கும் இடம். அதனால் இங்கிருந்து கிளம்புகிங்கள் என்று விரட்டியடிக்க, எம்.ஜி.ஆர் அவர்களை அழைத்துக்கொண்டு வேறு இடம் தேடி செல்வார். அப்போது வரும் பாடல் தான் ‘’புத்தன் ஏசுகாந்தி பிறந்தது’’ என்ற பாடல்.
இந்த பாடல் காட்சியை படமாக்க, நடிகர் நடிகைகள், ஏழை மக்கள் மற்றும் குழந்தைகள், செயற்கை மழை என அனைத்தும் தயாராக இருந்துள்ளது. ஆனால் ஒரு நிமிடம் யோசித்த எம்.ஜி.ஆர், இந்த பாடலில் குழந்தைகள் எல்லாம் நடிக்கிறார்கள். இந்த செயற்கை மழையால் அவர்களுக்கு ஜலதோஷம் பிடிக்க வாய்ப்பு உள்ளது. அதனால் கொஞ்சம் நேரம் ஆனாலும் பரவாயில்லை. செயற்கை மழைக்கு பயன்படுத்தும் தண்ணீரை சூடாக்கிவிடுங்கள் என்று கூறியுள்ளார்.
அப்போது உச்சத்தில் இருந்த எம்.ஜி.ஆர் சொன்னால் அதற்கு மறுப்பேச்சு இல்லை என்பதால், சில மணி நேரங்களில் அந்த தண்ணீர் முழுவதும் சூடாக மாற்றப்பட்டு அதன்பிறகு செயற்கை மழையாக பயன்படுத்தப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க தத்துவத்தின் பின்னணியில் அமைந்த இந்த பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.