சினிமாவில் பின்னணி பாடகர்கள் வந்தது எம்.ஜி.ஆருக்கு பெரிய உதவியாக இருந்தாலும், எம்.ஜி.ஆர் தனது சொந்த குரலில் பாடாதது ஏன் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
இந்தியாவில் ஆங்கிலேயே ஆட்சியில், கேரளாவில் நீதிபதியாக பதவியில் இருந்து கோபால் மேனன் என்பவர் மிகவும் நேர்மையான ஒருவராக இருந்துள்ளார். இதனால், அவருக்கு பல சோதனைகள் வர, ஒரு கட்டத்தில் இந்த வேலையே வேண்டாம் என்று விட்டுவிட்டு, கல்லூரி பேராசிரியராக இலங்கையில் சில ஆண்டுகள் அவர் வேலை செய்து வந்தபோது, 1917-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் பிறக்கிறார்.
ஒரு கட்டத்தில் அப்பா கோபால் மேனன் இறந்துவிட்ட நிலையில், ந்த துக்கத்திலேயே எம்.ஜி.ஆரின் மூத்த அண்ணன், இரண்டு அக்கா என 3 பேரும் மரணமடைந்து விடுகின்றனர். இதன் காரணமாக சத்தியபாமா மகன்கள் சக்ரபாணி, எம்.ஜி.ஆர் ஆகிய இருவருடனும் வேலு நாயர் என்பவர் உதவியுடன் கும்பகோணம் வருகிறார். வேலு நாயர் வேலை பார்த்த மதுரை பாய்ஸ் நாடக கம்பெனியில் எம்.ஜி.ஆர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியுள்ளார்.
அறிமுகமாக புதிதில் சிறுசிறு வேடங்களில் நடித்திருந்த எம்.ஜி.ஆர் ஒரு கட்டத்தில் பெண் வேடத்தில் நடிக்க தொடங்கியுள்ளார். அதன்பிறகு நாடக கம்பெனியில் இவருக்கான மரியாதை உயர்ந்து இவரை தனியாக கவனிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது. பெண் வேடத்தில் பாடல் பாடி அசத்திலாக நடித்து வந்த எம்.ஜி.ஆருக்கு 16-17 வயதில், மகரக்கட்டு உடைதல் நடைபெறுகிறது. சிறுவனாக இருந்த எம்.ஜி.ஆர் இளைஞராக மாற, அவரது முகத்தில் தாடி மீசை அரும்பியுள்ளது. அவரது குரலும் ஒரு ஆணுக்கான குரலாக கணீர் என்று மாறியுள்ளது.
அதன்பிறகும் எம்.ஜி.ஆர் பெண் வேடத்திற்கு சரியாக வரமாட்டார் என்று அவரை கூட்டத்தில் ஒருவராக நடிக்க வைத்துள்ளனர். அவருக்கான தனிப்பட்ட கவனிப்பும் இல்லாமல் போய்விட்டது. அதே சமயம் தனது குரலை வைத்து பாடல் பாட முயற்சித்த எம்.ஜி.ஆர், பாடலை சரியாக பாடாமல், திணறியுள்ளார். அதனால் பலரும் அவரை கிண்டல் செய்துள்ளனர். இதன் காரணமாகத்தான் திரைப்படங்களில் நடித்தபோது கூட எம்.ஜி.ஆர் பாடல் பாடுவதில்லை. பின்னணி பாடகர்கள் வந்தது அவருக்கு பெரிய உதவியாக இருந்துள்ளது.
பாடல் பாடும் குரல் வளம் இல்லாதால் கிண்டல் செய்யப்பட்ட எம்.ஜி.ஆர், அந்த நாடக கம்பெனியில் இருந்து எப்படியாவது வெளியில் வந்துவிட வேண்டும் என்று முடிவு செய்துள்ளார். ஆனால் அந்த காலத்தில் நாடக கம்பெனியில் இருந்து வெளியில் வருவது அவ்வளவு சுலபம் அல்ல. இதனால் தனது அம்மாவிடம் நிலைமையை எடுத்து சொல்லி என்ன செய்வது என்று கேட்டுள்ளார். இது குறித்து நாடக கம்பெனி முதலாளி சச்சிதானந்த பிள்ளையிடம் எம்.ஜி.ஆர் அம்மா கேட்க இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
அப்போது நீங்கள் நாடகத்தை முடித்துவிட்டு இந்த ஊரில் இருந்து கிளம்பும்போது நான் என் பிள்ளைகளை கூட்டிக்கொண்டு சென்றுவிடுவேன் என்று எம்.ஜி.ஆர் அம்மா சவால் விடுகிறார். இதன் காரணமாக நாடகத்தின் கடைசி நாளில், நாடக கொட்டகையின் அனைத்து பகுதிகளிலும் சச்சிதானந்த பிள்ளை காவலுக்கு ஆட்களை நிறுத்திய போது, எம்.ஜி.ஆர் அம்மா பார்வையாளர்களில் ஒருவராக வந்து எம்.ஜி.ஆர் அவரது அண்ணன் சக்ரபாணி ஆகிய இருவரையும வெளியில் அழைத்து வந்து காப்பாற்றியுள்ளார்.
அதன்பிறகு கந்தசாமி முதலியார் நாடக கம்பெனியில் சேர்ந்த எம்.ஜி.ஆருக்கு அடுத்து பட வாய்ப்பு கிடைத்து சதிலீலாவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் நாயகனாக நடித்தவர் கந்தசாமி முதலியாரின் மகன் எம்.கே.ராதா. படத்தை தயாரித்தவர் கந்தசாமி முதலியார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.