வேற்று கிரகத்தில் இருந்து பூமிக்கு வரும் வேற்றுகிரகவாசிகள் தொடர்பான படங்கள் ஹாலிவுட்டில் பல படங்கள் வந்திருக்கிறது. அதே சமயம் தமிழில், சமீபத்தில் அயலான் என்ற ஒரு படம் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியானது. ஆனால் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைக்கும் முன்பே, தமிழ் சினிமாவில் வேற்று கிரகவாசி பூமிக்கு வருவது போன்ற ஒரு படத்தை எடுத்துள்ளனர் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பிடித்து 3 முறை முதல்வர் இருக்கையில் அமர்ந்தவர் தான் எம்.ஜி.ஆர். அதேபோல் சினிமாவில் துணை நடிகராக அறிமுகமாகி, ஹீரோவாக உயர்ந்து ஒரு கட்டத்தில, தனது படங்கள் தொடர்பான முடிவுகள் எடுக்கும் வல்லமையுடன் வலம் வந்த இவர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முக திறமையை வளர்த்துக்கொண்டார். இவரது நடிப்பில் வெளியான பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற தவறியதே இல்லை.
அதேபோல் தனது படங்களில் வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்ளும் எம்.ஜி.ஆர், தொழில்நுட்ப வளர்ச்சி அதிகம் இல்லாத காலக்கட்டத்திலேயே, விண்வெளி மற்றும் வேற்றுகிரகவாசி தொடர்பான படங்களில் நடித்து அசத்தியுள்ளார். 1963-ம் ஆண்டு வெளியான படம் கலையாரசி. எம்.ஜி.ஆர் நாயகனாக நடித்திருந்த இந்த படத்தில் பானுமதி 2 வேடங்களில் நடித்திருந்தார். நம்பியார், பி.எஸ்.வீரப்பா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர்.
ஏ.காசிலிங்கம் என்பவர் இயக்கிய இந்த படத்திற்கு கே.வி.மகாதேவன் இசைமையத்திருந்தார். கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஆகியோர் பாடல்கள் எழுதியிருந்தனர். பூமியில் நாட்டியத்திலும் இசையிலும் வல்லமை பொருந்தியவராக இருக்கும் பானுமதி எம்.ஜி.ஆரை காதலிக்கிறார். இருவரும் தங்களது காதலை வளர்த்துக்கொண்டு இருக்கும் நேரத்தில், வேற்று கிரகத்தில் இருக்கும் மன்னரின் மகளுக்கு இசை மற்றும் பாடல்களை சொல்லித்தர ஒருவர் வேண்டும் என்ற நிலை ஏற்படுகிறது.
அப்போது விண்கலத்தில் வரும் வேற்றுகிரகவாசியான நம்பியார், இசை மற்றும் நடத்தில் வல்லமையுடன் இருக்கும் பானுமதியை கடத்திச்சென்றுவிடுகிறார். இதை தெரிந்துகொண்ட எம்.ஜி.ஆர் அவரை எப்படி மீட்டு மீண்டும் பூமிக்கு கொண்டு வந்தார் என்பது தான் இந்த படத்தின் கதை. தொழில்நுட்ப வளர்ச்சி அதிகம் இல்லாத காலக்கட்டத்திலேயே இது போன்ற படத்தை கொடுத்து அனைவரையும் வியக்க வைத்தவர் தான் எம்.ஜி.ஆர். இந்த தகவலை பத்திரிக்கையாளர் சுறா ஓ.எச் சினிமா யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.