தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பிடித்திருந்தவர் எம்.ஜி.ஆர், முதல்வர் ஆன பின்பும் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்ட எம்.ஜி.ஆர் ஒரு படத்திற்கு பூஜை போட்டு ஒரு பாடலும் தயாரான நிலையில் அந்த படம் தொடங்கப்படாமலே போய்விட்டது.
1977-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றிருந்தார். அதற்கு முன்பே சினிமாவில் இருந்து விலகிய அவர், முழுநேர மக்கள் பணியில் ஈடுபட்டிருந்தார். இதனிடையே 1978-ம் ஆண்டு கவிஞர் வாலியை சந்தித்த இரு தயாரிப்பாளர்கள், எம்.ஜி.ஆருக்காக ஒரு கதை தயார் செய்து அதற்கு திரைக்கதை வசனம் என அனைத்தும் நீங்கள் தான் எழுத வேண்டும் என்று கூறியிருந்தனர்.
முதல்வராக இருந்துகொண்டு எம.ஜி.ஆர் எப்படி நடிக்க முடியும் என்ற சந்தேகத்துடன் எம்.ஜி.ஆரை சந்தித்த வாலி, இது குறித்த கேட்டபோது, மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செயதுள்ளதாக எம்.ஜி.ஆர் கூறியிருந்தார். ஆனாலும் வாலிக்கு அதில் நம்பிக்கை இல்லாத நிலையிலும், எம்.ஜி.ஆர் சொன்னதற்காக ஒரு கதை எழுதியுள்ளார். சென்னை - மதுரை ஒரு விமான பயணத்தின்போது படத்தின் கதையை எம்.ஜி.ஆருக்கு வாலி கூறியுள்ளார்.
இந்த கதையை கேட்ட எம்.ஜி.ஆர் மிகவும் பிடித்திருப்பதாக கூறியிருந்த நிலையில், படத்திற்கு உன்னை விடாமாட்டேன் என்று டைட்டில் வைத்திருந்தார் வாலி. இதனிடையே எம்.ஜி.ஆர் படங்களில் நடிக்க மத்திய அரசு அனுமதி கொடுத்துவிட்ட நிலையில், படத்திற்கு இளையராஜா இசையமைப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. படத்தின் தொடக்க விழாவுக்கு அப்போதைய கவர்னவர் அழைக்கப்பட்டார். ஆனால் அவர் கடைசி நேரத்தில் விழாவுக்கு வர முடியாத நிலை ஏற்பட்டது.
சென்னை பிரசாத் லேப்பில் உன்னை விட மாட்டேன் படத்தின் பூஜை கோலாகலமாக நடைபெற்ற நிலையில், ஒரு பாடலும் பதிவு செய்யப்பட்டது. வாலி எழுத இளையராஜா இசையில் டி.எம்.சௌந்திரராஜன் அந்த பாடலை பாடியிருந்தார். பாடல் பதிவு செய்யப்பட்டவுடன் எம்.ஜி.ஆருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பாடலை கேட்ட எம்.ஜி.ஆர் தனக்கு திருப்தி இல்லை என்ற சொல்ல, மீண்டும் டி.எம்.எஸ். பாட 2-வது முறையாக பதிவு செய்து அனுப்பியுள்ளார்.
இப்போதும் டி.எம்.எஸ். பாடியது எம்.ஜி.ஆருக்கு திருப்தியாக இல்லை. இந்த பாடலை ஏற்கனவே இளையராஜா பாடி எம்.ஜி.ஆர் கேட்டுள்ளதால், அவர் பாடினால் நன்றாக இருக்கும் என்று யோசித்துள்ளார். அதை புரிந்துகொண்ட இளையராஜாவும் எம்.ஜி.ஆருக்காக பாடினார். கோலாகலமாக பூஜை நடந்து ஒரு பாடலும் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், உன்னை விடமாட்டேன் படம் அதன்பிறகு வளரவே இல்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“