சினிமாவில் பாடல் எழுத 10 வருடங்களாக முயற்சித்து, எம்.ஜி.ஆரை சந்திக்க முடியாமல் இருந்த ஒரு கவிஞர் தான் எழுதிய ஒரே பாடலில் எம்.ஜி.ஆரை வியக்க வைத்து அந்த பாடலையும் பெரிய ஹிட் பாடலாக கொடுத்துள்ளார்.
Advertisment
தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி பாதை வகுத்து முதல்வராக அமர்ந்து அசத்தியவர் தான் எம்.ஜி.ஆர். திரைத்துறையில், பல்வேறு கொள்கை பாடல்களை கொடுத்து மக்கள் மனதில் இடம் பிடித்த் எம்.ஜி.ஆர் தனது ஆரம்ப கால படங்களில் கவியரசர் கண்ணதாசன் மூலமாக தனது பாடல்களை உருவாக்கிக்கொண்டார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே அரசியல் மோதல் ஏற்பட்டதால், கண்ணதாசன் எம்.ஜி.ஆரை கடுமையாக விமர்சிக்க தொடங்கினார்.
கண்ணதாசன் விமர்சனம் செய்தாலும், அவர் இல்லாமல் எம்.ஜி.ஆர் படங்களின் பாடல்கள் இல்லை என்ற நிலையும் இருந்தது. இதனிடையெ 1967-ம் ஆண்டு தமிழகத்தில் தி.மு.க ஆட்சியை கைப்பற்றிய நிலையில், எம்.ஜி.ஆர் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அதே ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் புதிய பூமி என்ற படமும் தொடங்கப்பட்டது. சாணக்யா என்பவர் இயக்கிய இந்த படத்தில் ஜெயலலிதா நாயகியாக நடித்திருந்தார்.
நம்பியார், அசோகன், நாகேஷ் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்த இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில், விழியே, விழியே என்ற பாடல் உட்பட 3 பாடல்களை கண்ணதாசன் எழுதியிருந்தார். அப்போது எம்.ஜி.ஆருக்கான கொள்கை பாடல் தேவைப்பட்டது. ஆனால் இதை கண்ணதாசனை வைத்து எழுத முடியாது என்பதால் எம்.ஜி.ஆர் என்ன செய்வது என்று யோசித்துள்ளார்.
Advertisment
Advertisements
அப்போது புதிய பூமி படத்தின் திரைக்கதை ஆசிரியர் வி.சி.குகநாதன், பூவை செங்குட்டுவன் என்ற ஒரு கவிஞர் இருக்கிறார் அவரை வைத்து எழுதலாம் என்ற சொல்ல, அவரைப்பற்றி எம்.ஜி.ஆர் விசாரித்துள்ளார். ‘’மருதமலை மாமணியே முருகையா’’ பாடலை எழுதியது அவர் தான் என்று சொல்ல, பக்தி பாடல் எழுதியவர் எப்படி கொள்கை பாடலை எழுத முடியும் என்று எம்.ஜி.ஆர் கேட்டுள்ளார். அந்த பாடலை அவர் எழுதியதால் தான் இந்த பெயர் கிடைத்துள்ளது, அடிப்படையில் அவர் ஒரு திராவிடவாதி என்று கூறியுள்ளார்.
இதை கேட்ட எம்.ஜி.ஆர், சரி வரச்சொல்லி பாடலை எழுத சொல்லுங்கள் பிடித்திருந்தால் வைத்துக்கொள்ளலாம் என்று சொல்ல, மறுநாள் கம்போசிங்கிற்கு பூவை செங்குட்டுவன் அழைக்கப்பட்டுள்ளார். சாதாரணமாக மஞ்சப்பையுடன் வந்த அவரிடம், இசையமைப்பாளர் எம்.எஸ்.வி காட்சியை விளக்கி சொல்ல, உடனடியாக புரிந்துகொண்ட அவர் பாடலை எழுதி கொடுத்துள்ளார். இதை வாங்கி படித்த எம்.எஸ்.விக்கு பாடல் மிகவும் பிடித்துவிட்டது.
எம்.ஜி.ஆர் இந்த பாடலை தேர்வு செய்வதற்கு முன் இதற்கு டியூன் போட்டுவிடலாம் என்று சொல்லி, எம்.எஸ்.வி டியூன் போட்டுவிட்டு, எம்.ஜி.ஆரிடம் காட்டியுள்ளார். பாடலை பார்த்த எம்.ஜி.ஆர் எனது கொள்கைகள் அனைத்தும் தெரிந்துகொண்டு என் கூடவே இருக்கும் கவிஞர் வாலி எழுதியது போலவே இருக்கிறது என்று பாராட்டி அந்த பாடலை படத்தில் வைக்குமாறு கூறியுள்ளார். 10 ஆண்டுகளாக பாடல் எழுத வாய்ப்பு தேடி அலைந்த பூவை செங்குட்டுவன் தனக்கு கிடைத்த முதல் வாய்ப்பிலேயே எம்.ஜி.ஆரை வியக்க வைத்துள்ளார்.
அப்படி அவர் எழுதிய பாடல் தான் ‘’நான் உங்கள் வீட்டு பிள்ளை, இது ஊரறிந்த உண்மை, நான் செல்லுகின்ற பாதை பேரறிஞர் காட்டும் பாதை’’ என்ற பாடல். எம்.ஜி.ஆர் குறித்து எந்த நிகழ்ச்சிகள் இருந்தாலும், தற்போது வரை இந்த பாடல் இல்லாமல் முழுமையடையாத நிலை தான் உள்ளது. இந்த பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“