எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுத சென்ற வாலிக்கு பாடலின் முதல் வரி கொடுத்த பின், 2-வது வரியை எழுத முடியாமல் இருந்தபோது அவருக்கு கலைஞர் கருணாநிதி உதவி செய்துள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
1970-ம் ஆண்டு முரசொலி மாறன் கதை மற்றும் தயாரிப்பில் வெளியான படம் எங்கள் தங்கம். கிருஷ்ணன் பஞ்சு இயக்கிய இந்த படத்தில் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா, ஏ.வி.எம்.ராஜன், அசோகன், தேங்காய் சீனிவாசன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்க, கவிஞர் வாலி அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார்.
இந்த படத்தில் ஒரு பாடலில், ‘’நான் அளவோடு ரசிப்பவன்’’ என்ற ஒற்றை வரியை கொடுத்து அடுத்தடுத்து பாடல்களை எழுதுமாறு எம்.எஸ்.விஸ்வநாதன் வாலியிடம் கூறியுள்ளார். அதன்பிறகு பாடலை எழுத யோசித்த வாலிக்கு, எந்த யோசனையுமே வராத நிலையில், வெற்றிலைபாக்கு போட்டுக்கொண்டே பாடலுக்கான யோசித்துக்கொண்டு இருந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த கலைஞர் மு.கருணாநிதி, என்னய்யா வாலி பாடல் எழுதியாச்சா என்று கேட்க, ‘’நான் அளவோடு ரசிப்பவன்’’ என்று சொல்லிவிட்டார், அடுத்த வரி வரவில்லை என்று கூறியுள்ளார். இதை கேட்ட கலைஞர், விசு அந்த டியூனை வாசி என்று சொல்ல, எம்.எஸ்.வி டியூனை வாசித்துள்ளார். இதை கேட்ட கலைஞர், ‘’எதையும் அளவின்றி கொடுப்பவன்’’ என்று அடுத்த வரியை கூறியுள்ளார். இதை கேட்ட வாலி ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளார்.
அதன்பிறகு முழு பாடலையும் எழுதிய வாலி, எம்.எஸ்.வியிடம் கொடுக்க, டி.எம்.சௌந்திராஜன், பி.சுசீலா குரலில் இந்த பாடல் பதிவு செய்யப்பட்டு, எம்.ஜி.ஆர் கேட்டுள்ளார். 10 நாட்கள் கழித்து வாலி எம்.ஜி.ஆரை சந்திக்கும்போது அவர், வாலிக்கு முத்தம் கொடுத்துள்ளார். இதை பார்த்த வாலி எதுக்கு அண்ணா முத்தம் என்று கேட்க, என்னை அளவின்றி கொடுப்பவன் என்று புகழ்ந்து எழுதியிருக்கிறாயே அதற்காகத்தான் என்று கூறியுள்ளார்.
அந்த ஒற்றை வரிக்காக நீங்கள் முத்தம் கொடுக்க வேண்டும் என்றால் கலைஞருக்கு தான் கொடுக்க வேண்டும். அவர் தான் அந்த வரியை சொன்னார் என்று எம்.ஜி.ஆரிடம் வாலி கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“