இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் வாங்கிக்கொடுத்து டேப்ரெக்கார்டரை வேண்டாம் என்று எம்.ஜி.ஆர் மறுத்துவிட்டதாக நடிகர் மயில்சாமி பகிர்ந்துள்ள தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் மெல்லிசை மன்னர் என்று பெயரெடுத்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். 1928-ம் ஆண்டு சென்னையில் பிறந்த இவர், 1952-ம் ஆண்டு வெளியாக பணம் என்ற படத்தின் மூலம் தனது இசை பயணத்தை தொடங்கியவர். எம்.ஜி.ஆர். சிவாஜி, முத்துராமன், ஜெமினிகணேசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்த பெரும் எம்.எஸ்.வி-க்கு உண்டு.
அன்றைய காலகட்டத்தில் விஸ்வநாதன் – ராமமூர்த்தி இணைந்து இசையமைக்கும் படங்கள் என்றாலும், எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்கும் படங்கள் என்றாலும் பாடல்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பது எழுதப்படாத விதி என்று பேச்சு உண்டு. அதை உறுதிப்படுத்தும்வகையில் இப்போதும் கூட எம்.எஸ்.வி இசையமைத்த பாடல்களை ரசிக்க ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
அதேபோல் தனது திரை பயணத்தில் தனது சமகால இசையமைப்பாளர்களை தாண்டி இளையராஜா அவரது மகன் யுவன் சங்கர் ராஜா என இன்றைய தலைமுறை இசையமைப்பாள்களுடன் இணைந்து இசையமைத்துள்ள எம்.எஸ்.வி-யை நடிகர் மயில்சாமி சந்தித்தபோது எம்.ஜி.ஆர் குறித்து ஒரு தகவலை தெரிவித்துள்ளார். சமீத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் மயிலசாமி அதை தெரிவித்துள்ளார்.
ஒருமுறை வெளிநாடு சென்ற எம்.எஸ்.வி அங்கிருந்து ஒரு டேப்-ரெக்கார்டரை வாங்கி வந்துள்ளார். விலை உயர்ந்த அந்த டேப்-ரெக்கார்டரை பார்த்த பலரும் எவ்வளவு விலை அழகாக இருக்கிறதே பாட்டு எப்படி கேட்கும் என்று விசாரித்துள்ளனர். அப்போது எம்.எஸ்.வி நிலவு ஒரு பெண்ணாகி என்ற பாடலை போட்டு காண்பித்துள்ளார். அந்த டேப்-ரெக்கார்டரில் கேட்ட பலர் சூப்பராக இருக்கிறது என்று கூறியுள்ளனர்.
அந்த நேரத்தில் அங்கு வந்த எம்.ஜி.ஆர் இது என்ன என்று கேட்க வெளிநாட்டு டேப்-ரெக்கார்டர் என்று கூறிய எம்.எஸ்.வி அதே பாடலை மீண்டும் போட்டு காட்டியுள்ளார். இதை கேட்ட எம்.ஜி.ஆர் ஓகே என்று சொல்லிவிட்டு அதே பாடலை சாதாரணமாக நாம் பயன்படுத்தும் டேப்ரெக்கார்டரில் போட்டு காட்டுமாறு கூறியுள்ளார்.
எம்.ஜி.ஆர் சொன்னதுபோல் எம்.எஸ்.வி.யும் செய்துள்ளார். அந்த பாடலை கேட்ட எம்.ஜி.ஆர் சூப்பர் என்று பாராட்டியுள்ளார். அதற்கு எம்.எஸ்.வி இது விலை உயர்ந்தது வெளிநாட்டு பொருள் இதில் கேட்பதை விட்டு விட்டு சாதாரண டேப்ரெக்கார்டரில் உள்ளதை ரசிக்கிறீர்களே என்று கேட்டுள்ளார். அதற்கு எம்.ஜி.ஆர். எனது ரசிகர்கள் சாதாரணமாகவர்கள் அவர்கள் இதில் தான் எனது பாடலை கேட்கிறார்கள். அப்படி இருக்கும்போது நானும் அதில் தானே கேட்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர் கூறியுள்ளார்.
இதை கேட்டு எம்.எஸ்.வி திகைத்து போனதாக கூறியுள்ள மயில்சாமி, இப்படி ஒரு மனிதரை நாம் எப்படி மறக்க முடியும். நான் ராமசாமியின் மகன் என்பதை விட எம்.ஜி.ஆரின் பக்தன் என்பதில் தான் பெருமை என்று கூறியுள்ளார். இந்த வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”