தமிழ் சினிமாவில் தனது ஆளுமையின் மூலம் உச்சத்தை தொட்ட எம்.ஜி.ஆர் தான் இயக்கி நடித்த உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் நடிகை லதாவை அறிமுகம் செய்து வைத்தார். இந்த படத்தில் வேறொரு வெளிநாட்டு நடிகையும் நடித்திருந்தார். அவர் நடிக்கும்போது முதல் நாள் படப்பிடிப்பில் நடந்த சம்பவம் குறித்து நடிகர் மயில்சாமி ஒரு வீடியோவில் கூறியுள்ளார்.
எம்.ஜி.ஆர் முதன் முதலில் இயக்கி தயாரித்து நடித்த படம் நாடோடி மன்னன். இந்த படத்திற்கு பல தடைகள் வந்திருந்தாலும், படத்தின் பாதியில் நடிகை பானுமதி விலகியிருந்தாலும், அதை பற்றி கவலைப்படமாமல் படத்தை இயக்கிய முடித்தார். நாடோடி மன்னன் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
எம்.ஜி.ஆருக்கு பெரிய லாபத்தை எடுத்து கொடுத்தது. அதன்பிறகு பல படங்களில் நடித்த எம்.ஜி.ஆர் மீண்டும் தயாரிப்பு இயக்கம் நடிப்பு என்று இறங்கிய படம் உலகம் சுற்றும் வாலிபன். முதல்முறையாக வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட இந்த படம் எம்.ஜி.ஆருக்கு மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவுக்கும் புதுமையாக அமைந்தது. மேலும் எம்.ஜி.ஆர் நடிப்பில் விளம்பரம் இல்லாமல் வெளியாகி பெரிய வெற்றியை கொடுத்த படம் உலகம் சுற்றும் வாலிபன்.
இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை லதா அடுத்து எம்.ஜி.ஆருடன் தொடர் வெற்றிப்படங்களை கொடுத்தார். லதாவை தவிர இந்த படத்தில், வெளிநாட்டு நடிகை மேத்த ரன்க்ரிட் நடித்திருந்தார். அவருக்கான முதல் காட்சி படமாக்கப்பட்டபோது, அவர் முதன் முதலில் எம்.ஜி.ஆரை பார்த்துள்ளார். அவரை பார்த்தவுடன், இவருடனா நடிக்க போகிறோம், இவ்வளவு வயதானவராக இருக்கிறாரே என்று நினைத்துள்ளார்.
அப்போது செட்டுக்கு வந்த எம்.ஜி.ஆர், மேக்கப் அறைக்கு சென்று, அன்றைய காட்சிக்கான மேக்கப்புடன் தயாராகி வந்துள்ளார். அப்போது அவரை பார்த்த அந்த வெளிநாட்டு நடிகை, இப்போது போனாரே அவரா இவர் என்று வியந்து பார்த்துள்ளார். தன்னுடன் நடிக்கவே தயங்கிய ஒரு வெளிநாட்டு நடிகையை, தனது நடிப்பு மற்றும் இயக்குனரின் திறமையை வைத்த அவரையே வியக்க வைத்தவர் எம்.ஜி.ஆர் என்று நடிகர் மயில்சாமி ஒரு யூடியூப் சேனலில் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“