தமிழ் சினிமாவில் க்ளாசிக் ஹீரோக்களில் முக்கியமானவர் எம்.ஜி.ஆர் நடிப்பு இயக்கம் என சினிமாவிலும், அரசியலிலும் தனக்கென தனி ஆளுமையை வளர்த்துக்கொண்ட இவர், எந்த பிரச்சனை வந்தாலும் அதை அசால்ட்டாக எதிர்கொள்ளும் திறன் மிக்கவர் என்று அவரை பற்றி தெரிந்த அனைவரும் கூற நாம் கேட்டிருக்கலாம். அப்படி ஒரு சம்பவம் குறித்து தற்போது தெரிவந்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி திரைப்பட தயாரிப்பாளராக இருந்தவர் சின்னப்ப தேவர். எம்.ஜி.ஆர் நடிப்பில் கடந்த 1956-ம் ஆண்டு வெளியான தாய்க்கு பின் தாரம் என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாக இவர், தொடர்ந்து எம்.ஜி.ஆர் நடிப்பில், தாய் சொல்லை தட்டாதே, தாயை காத்த தனையன், குடும்ப தலைவன், வேட்டைக்காரன், தாய்க்கு தலைமகன் உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார்.
இதில் முதல் படமாக தாய்க்கு பின் தாரம் படம் 1956-ம் ஆண்டு வெளியான நிலையில், அடுத்த படமாக தாய் சொல்லை தட்டாதே 1961-ம் ஆண்டு வெளியானது. இந்த இடைப்பட்ட காலத்தில் எம்.ஜி.ஆர் சின்னப்பதேவர் இடையே மோதல் போக்கு இருந்துள்ளது. தாய்க்கு பின் தாரம் படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை கேட்டாமல் விற்றதால் ஏற்பட்ட மோதல் காரணமாக இருவரும் பேசாமல் இருந்துள்ளனர்.
இந்த மோதலை இப்படியே விடக்குமாது என்று சமாதானப்படுத்த எம்.ஜி.ஆர் முயற்சித்துள்ளார். அதற்காக தான் 1961-ம் ஆண்டு வெளியான அரசிளங்குமரி படத்தில் ஒரு காட்சியில் நடிக்க சின்னப்ப தேவரை நடிக்க வைக்க யோசித்த எம்.ஜி.ஆர், அதற்காக படத்தின் தயாரிப்பாளர் சோமசுந்தரம் மகனிடம் சொல்லி சின்னப்பதேவரிடம் பேசும்படி கூறியுள்ளார்.
அதன்படி அவர் பேசும்போது சின்னப்ப தேவர் முடியவே முடியாது. நான் முடியாது என்று சொல்லிவிட்டேன் என்று அவரிடம் போய் சொல்லுங்கள் என்று கூறியுள்ளார். இதை அப்படியே வந்து எம்.ஜி.ஆரிடம் சொல்ல அவரே சின்னப்பதேவர் உங்களால் வளர்ந்தவர் அது எப்படி அவர் முடியாது என்று சொல்லலாம் நீங்கள் திரும்பவும் போய் பேசுங்கள் என்று கூறி அனுப்பியுள்ளார். எம்.ஜி.ஆர் சொல்லி அனுப்பியதை கேட்ட சின்னப்பதேவர், அவர் இப்படியா சொன்னார் வா நேரில் போய் கேட்போம் என்று எம்.ஜி.ஆரிடம் சண்டை போட கிளம்பியுள்ளார்.
படப்பிடிப்பு தளத்திற்கு வந்த சின்னப்ப தேவர் ஆவேசகமாக சண்டை போட எம்.ஜி.ஆரை நோக்கி ஓடியுள்ளார். இதை கவனித்த எம்.ஜி.ஆர் சாதாரணமாக வந்து சின்னப்பதேவரை குண்டுக்கட்டாக தூக்கிக்கொண்டு மேக்கப் ரூமுக்கு சென்றுள்ளார். அதன்பிறகு இருவரும் சமாதானமாகி வெளியான படம் தான் தாய் சொல்லை தட்டாதே.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“