நீண்ட நாட்களுக்குப் பிறகு சிவா நடிப்பில் வெளிவந்திருக்கும் “சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும்” படம் எப்படி இருக்கிறது?
கதை:
இன்ஜினியரிங் முடித்துவிட்டு வேலை இல்லா பட்டதாரியாக இருக்கும் சிவா,தன் வாழ்க்கையை ஓட்டுவதற்காக ஸ்விக்கியில் உணவு டெலிவரி செய்யும் வேலை செய்ய தொடங்குகிறார்.
இந்நிலையில் ஷா ரா என்னும் விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு ஸ்மார்ட் போன் சிவாவின் வாழ்க்கைக்குள் வருகிறது. அதன் பிறகு அந்த ஸ்மார்ட் போன், சிவா என்ன கேட்டாலும் அதை உடனே நிறைவேற்றி தரும் ஒரு அதிஷ்டபோனாகவும் மாறுகிறது. ஒரு கட்டத்திற்கு மேல் அந்த ஸ்மார்ட் போனே சிவாவிற்கு பெரும் சிக்கல்களையும் ஏற்படுத்துகிறது. இந்த சிக்கல்களிலிருந்து சிவா எப்படி மீண்டு வருகிறார் என்பதே இப்படத்தின் கதை.
நடிகர்களின் நடிப்பு எப்படி?.
கதையின் நாயகனாக வரும் சிவா தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அவருடைய முந்தைய படங்கள் போலவே இப்படத்திலும் எந்தவித கெட்டப் சேஞ்சும் இன்றி இயல்பாக வருகிறார். அவருடைய ஒன் லைன் பஞ்சஸ் நம்மை குதுகலப்படுத்துகிறது. இன்றைய காலகட்டத்தில் டெலிவரி செய்யும் ஊழியர்கள் படும் கஷ்டங்களை காமெடியாக சொல்லி இருக்கும் விதம் வரவேற்கத்தக்கது. கதாநாயகியாக வரும் அஞ்சு குரியனுக்கு முதல் படம் என்பதால் நடிப்பதற்கான வாய்ப்பு பெருமளவில் இல்லை.
ஸ்மார்ட் போன் சிம்ரனாக வரும் மேகா ஆகாஷ் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஸ்மார்ட்போனாக அவர் செய்யும் சேட்டைகள் ரசிக்க வைக்கிறது. சிம்ரனை கண்டுபிடிக்கும் விஞ்ஞானியாக வரும் ஷா ரா படத்திற்கு கூடுதல் பலம்.பாடகர் மனோவின் காமெடிகள் சிரிப்பு சரவெடி. மற்ற நடிகர்கள் தங்களுக்குரிய ரோலை நன்றாக செய்திருக்கிறார்கள்.
இயக்கம் மற்றும் இசை:
ஒரு வித்தியாசமான கதையை வைத்துக்கொண்டு திரைக்கதையை போரடிக்காமல் எழுதி இருப்பதே இப்படத்திற்கு பாஸ்மார்க்கை வழங்குகிறது. குழந்தைகளையும், இளைஞர்களையும் பெருமளவில் கவருவதற்காக சில விஷயங்கள் இப்படத்தில் அமைந்துள்ளது. அது மட்டுமல்லாமல் விஷூவலாக பார்க்கும் போது இப்படம் பல இடங்களில் நமக்கு நம்மை ரசிக்க வைக்கிறது.குறிப்பாக கிளைமாக்ஸில் வரும் பொம்மை சண்டை காட்சிகள் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். லியோன் ஜேம்ஸ்’ன் இசையும், பின்னணி இசையும் படத்திற்கு ஏற்றார் போல அமைந்திருந்தாலும் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்.
மொத்தத்தில் படம் எப்படி?
ஒரு ஸ்மார்ட் போனுக்கு உயிர் வந்தால் என்ன நடக்கும் என ஒரு வித்தியாசமான கதையை வைத்து அதில் சில பல நகைச்சுவைகளை உள்ளடக்கி போர் அடிக்காமல் அனைவரும் ஒருமுறை பார்த்து ரசிக்கும்படியான ஒரு ஜாலியான பொழுதுபோக்கு திரைப்படமாக இப்படம் அமைந்திருக்கிறது. லாஜிக் குறைகள் பல இடங்களில் இருந்தாலும் ஒரு படமாக பார்ப்பதற்கு நல்ல என்டர்டைன்மென்ட்டாக இருக்கிறது. மொத்தத்தில் அகில உலக சூப்பர் ஸ்டார் “சிவாவிற்கு” ஒரு நல்ல வெற்றி படமாக இது அமையும் என எதிர்பார்க்கலாம்.
Overall – A good Fantasy Entertainer.
Marks – (3.5/5)🌟🌟🌟
நவீன் குமார்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil