Kantara Chapter 1 Poster Out: 2025-ம் ஆண்டு இந்திய அளவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள காந்தாரா தி லெஜண்ட் அத்தியாயம் 1 திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிகை ருக்மணி வசந்த் இணைந்துள்ளார்.
கன்னட மொழியில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி இந்திய அளவில் பெரிய வெற்றியை பெற்ற படம் காந்தாரா. ரிஷப் ஷெட்டி இயக்கி நாயகனாக நடித்த இந்த படம், பஞ்சுலி என்ற தெய்வத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. 14 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்த படம் உலகளவில் 400 கோடிக்கு மேல் வசூலித்து பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
மனிதர்களுக்கும் இயற்கையிலிருந்து கிடைக்கும் வளங்களுக்கும் இடையிலான போராட்டத்தை, கடவுளின் ஆட்டத்துடன் இணைத்து ரிஷப் ஷெட்டி படத்தை இயக்கியிருந்த விதம் அனைவரையும் கவர்ந்தது. படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் சிவா கேரக்டராக ரிஷப் ஷெட்டி ஆடிய ஆட்டம் இன்றும் ரசிகர்களால் சிலாகிக்கப்படுகிறது. அந்தப் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு, இப்படத்தின் ப்ரீக்வெல் 'காந்தாரா: ஒரு காதல் அத்தியாயம் 1' என்ற தலைப்பில் உருவாகி வருகிறது.
இந்த படத்தில் ரிஷப் ஷெட்டியே எழுதி, இயக்கி, நடிக்கிறார். ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படத்தில் கதாநாயகி யார் என்ற கேள்வி எழுந்து வந்த நிலையில், தற்போது இந்த படத்தில் நாயகியாக நடிகை ருக்மணி வசந்த் நடித்து வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் கனகவதி என்ற பாரம்பரியமான மற்றும் இளவரசி போன்ற கேரக்டரில் இவர் நடிப்பதாக கூறப்படுகிறது.
ஹோம்பலே பிலிம்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாகவும், படம் 2025 அக்டோபர் 2 அன்று வெளியாக இருப்பதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. சமீபத்தில் படக்குழுவினர் வெளியிட்ட பிகைண்ட் தி சீன்ஸ் (Behind the Scenes) வீடியோ, இந்தப் படம் ஒரு பெரிய பட்ஜெட்டில், பக்திப் பின்னணியில் உருவாகி வருவதை உறுதி செய்கிறது.
கன்னடத்தில் வெளியான 'சப்த சாகரதாச்சே எல்லோ' (பாகம் A மற்றும் B) என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் ருக்மிணி வசந்த். தமிழில் விஜய் சேதுபதி நடித்த 'ஏஸ்' என்ற படத்திலும் நடித்திருந்த இவர் தற்போது, தமிழில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மதராஸி' என்ற படத்திலும் இவர் நடித்து வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இந்தப் படம் 2025 செப்டம்பர் 5 அன்று வெளியாகவுள்ளது.
காந்தாரா படத்தின் முதல் பாகத்தில் சப்தமி கவுடா, கிஷோர் மற்றும் அச்சுத் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஷிவா மற்றும் வன அதிகாரி முரளி ஆகியோரின் போராட்டத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படம், மக்களின் பாரம்பரியத்தையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் பற்றிய முக்கிய கருத்துக்களைப் பேசியது குறிப்பிடத்தக்கது.