தமிழ் சினிமாவில் இசைஞானி என்று போற்றப்படும் இளையராஜா, தனது முதல் வெளிநாட்டு பயணத்தில் பாடகர் டி.எம்.சௌந்திரராஜன் மேடையில் வைத்து தன்னை மட்டம்தட்டி பேசியதாக கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் இளையராஜா. இசையின் ராஜா, இசைஞானி என்று பல பட்டப்பெயர்கள் இவருக்கு உண்டு. 1976-ம் ஆண்டு வெளியான அன்னக்கிளி படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா தொடர்ந்து பல ஹிட் படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவரின் பாடல்களுக்காகவே பெரிய வெற்றியை கொடுத்த பல படங்கள் உள்ளன.
தற்போது 80 வயதை கடந்துவிட்டாலும், தமிழ் சினிமாவில் இன்னும் இசையில் பல வித்தியாசங்களை காட்டி வரும் இளையராஜா இன்றைய இசையமைப்பாளர்களுக்கு போட்டியாக பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இவரின் வாழ்க்கை வரலாறு இளையராஜா என்ற பெயரிலேயே படமாக்கப்பட உள்ளது. இதற்காக ஃபர்ஸ்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த படத்தில் இளையராஜா வேடத்தில் தனுஷ் நடித்து வருகிறார்.
இளையராஜாவுக்கு இசை குருவாக இருப்பவர்கள் 3 பேர். அதில் அவரது அண்ணன் பாவலர், தண்ராஜ் மாஸ்டர் அடுத்து இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ். அதேபோல் தான் இசையமைப்பாளராக ஆவதற்கு முன்பு பல இசையமைப்பாளர்களுக்கு கிட்டார் வாசித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அன்னக்கிளி படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இவர், அடுத்தடுத்து தொடர் வெற்றிப்படங்களை கொடுத்து தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக மாறினார்.
தனது இசையமைப்பில் 3 படங்கள் வெளியானபோது, ஒரு இசை நிகழ்ச்சிக்காக இளையராஜா மலேசியா சென்றுள்ளார். அப்போது அவருடன் பாடகர் டி.எம்.சௌந்திரராஜனும் சென்றுள்ளார். இந்நிகழ்ச்சியில் இளையராஜா மேடையில் தான் இசையமைத்த பாடல்களை பாடிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது, டி.எம்.எஸ் மேடையில், இசையமைப்பாளர் ஜி.ராமநாதன் இசையமைத்த பாடலுடன் சேர்த்து இளையராஜாவை ஒப்பிட்டு தரக்குறைவாக விமர்சித்துள்ளார்.
கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இளையராஜா, நீங்கள் முதன்முதலில் சென்ற வெளிநாட்டு பயணம் அங்கு நடந்த மறக்க முடியாத தருணம் எது என்று கேட்ட கேள்விக்கு இளையராஜா இந்த சம்பவத்தை பகிர்ந்துள்ளார். டி.எம்.எஸ். பாடிய ஒரு பாடலை எடுத்துவிட்டு இளையராஜா எஸ்.பி.பி குரலில் அந்த பாடலை மீண்டும் பதிவு செய்தார் என்று தகவல் உள்ள நிலையில், இளையராஜாவின் இந்த செயலுக்கு டி.எம்.எஸ். உடன் நடந்த சம்பவம் தான் காரணமாக இருக்குமோ என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“